விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது.
அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது.
இந்நிலையில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடனும், மிக நலமுடனும் இருக்கிறார் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதாலும், சர்வதேச சூழல் தற்போது தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதாலும் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் கூறினார்.
பிரபாகரன் விரைவில் தமிழீழம் பற்றிய விரிவான திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக கூறிய பழ.நெடுமாறன், அதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பு மூலம் நான் அறிந்த செய்தியை அவர்கள் அனுமதியுடன் தற்போது தெரிவித்திருக்கிறேன்.
பிரபாகரன் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்பது உலகம் முழுவதும் இருக்கக்கக்கூடிய தமிழர்களின் ஆவலாக இருக்கிறது விரைவில் அவர் வெளிப்படுவார்.
அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். இந்தச் செய்தி ஈழத் தமிழர்களுக்கு நன்மையும், நம்பிக்கையும் கொடுக்கும்” என்றார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.