துருக்கி,சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மனிதப் பேரவலத்துக்கு உதவுவதில் பாரபட்சம் காட்டும் உலக நாடுகள்!

Date:

-லத்தீப் பாரூக்

உலகளாவிய பிரசார வலைபின்னலான அவாஸ் துருக்கி மற்றும் சிரியாவில ஏற்பட்ட பூகம்ப பேரழிவின் பின் துருக்கி மற்றும் சிரியாவுக்கு இது அழிவுநாள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

“மிகப் பெரிய அழிவான பூகம்பம் இடம்பெற்ற நாள் எமது நாட்டில் மட்டுமன்றி ஒட்டு மொத்த உலக நாடுகளுக்கும் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அதிர்ச்சியை ஏற்படுத்திய நாளாகும்” என்று துருக்கி ஜனாதிபதி தய்யிப் எர்டொகன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டுரை எழுதப்படும் 2023 பெப்ரவரி 15ம் நாள் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.

மீட்பு பணி என்பது ஒவ்வொரு மணிநேரமும் சிக்கலானதாகவும் சவால் மிக்கதாகவும் மாறிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் துருக்கியில் மிகப் பெரிய அளவிலான மீட்புப் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

யுத்தத்தால் ஏற்கனவே சின்னாபின்னமாகி உள்ள சிரியாவில் நிலைமைகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு மோசமாக மாறி உள்ளன.

துருக்கியை நோக்கி உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் சிரியாவை நோக்கிய உதவிகள் மெதுவாகவே நகருகின்றன.

2011ல் ஏற்பட்ட அரபு வசன்த போராட்டங்களை அடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிரியா மீது கடுமையான தடைகளை அமுல் செய்துள்ளன.

தற்போதைய மனிதப் பேரவல நிலையிலும் மோசமான நெருக்கடியிலும் கூட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மக்களுக்கு உதவும் வகையில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு உதவிகளை அனுப்பும் வகையில் தடைகள் மீதான எந்த தளர்வும் இதுவரை காட்டப்படவில்லை.

சிரியாவின் வடமேற்கு பகுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசம். பொருளாதார
நெருக்கடியால் ஏற்கனவே பாதிக்கப்ட்டுள்ள பிரதேசம்.

தற்போது பூகம்பத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. மோதல்களுக்கு அப்பால் வறுமை மற்றும் இயற்கை அழிவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிக்கு இன்னும் போதிய அளவு உதவிகள் கிடைக்கவில்லை.

இவற்றை எல்லாம் கடந்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிரியாவின் அரச படைகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தி உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாதிக்கபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு நேரடியாக உதவிகள் சென்றடைவதை தடுக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படடுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தப் பகுதிகளில்  இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் குளிரில் உறைந்து
மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேர்ள்ட் விஷன் அமைப்பின் பேச்சாளர் ஹம்ஸா பர்ஹாமெயே தெரிவித்துள்ள கருத்தில் உணவுப் பாதுகாப்பற்ற நிலை மிகவும் கவலைக்கு இடமானதாக உள்ளது. அதைவிட அங்கு காலநிலை உறைநிலைக்கு வந்துள்ளதால் நிவாரணப் பணியாளர்களும், நிவாரண முகவராண்மைகளும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளன. வீடுகளை விட்டு வெளியேறி உள்ள ஆயிரக்கணக்கான சிரியா மக்கள் வெட்ட வெளியில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பின் அதிர்வுகள் காரணமாக இன்னும் பல கட்டிடங்கள் இடிந்து விழலாம் என்ற அச்சம் காரணமாவே இந்த மக்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

உலகளாவிய ரீதியில் இந்த பூகம்பம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பல நாடுகள் நிவாரணப் பணியாளர்களையும் தேடுதல் குழுக்களையும் சம்பவ இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளன.

இந்த நிவாரணப் பணியாளர்களில் பலஸ்தீன குழுவும் அடங்கும். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 73 பேர் கொண்ட பலஸ்தீன குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலைமைகளின் நடுவே அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் போதியளவு உதவிகளை வழங்கத் தவறி உள்ளன.

முன்னொருபோதும் இல்லாத அளவிலான மாபெரும் மனிதப் பேரவலம் இடம்பெற்று ஒரு வாரம் கழிந்துள்ள நிலையிலும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நிலைமையை அலட்சியம் செய்துள்ளதாகவே காண முடிகின்றது.

இதுபற்றி குறிப்பிட்டுள்ள பிரிட்டிஷ் ஊடகவியலாளர் டேவிட் ஹேர்ஸ்ட் “துருக்கி சிரியா பூகம்பம்: பில்லியன் கணக்கில் யுத்தத்துக்காக வழங்கும் ஐரோப்பா தனது உண்மையான இதயமே அற்ற முகத்தை இப்போது வெளிப்படுத்தி உள்ளது” என்று தலைப்பிட்டுள்ள கட்டுரையில்  யுக்ரேனுக்கு 2.7 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை பிரிட்டன் வழங்கி உள்ளது.

ஆனால் துருக்கியிலும் சிரியாவிலும் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 23 மில்லியன் மக்களுக்கு ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே வழங்கி உள்ளது என்று கோடிட்டுக் காட்டி உள்ளார்.

இந்த அழிவு இடம்பெற்று மூன்றாவது தினத்திலேயே துருக்கியின் மிக அண்மைய அயல் பிரதேசமான ஐரோப்பிய நாடுகளின் தலைப்புச் செய்திகளில் இருந்தும் இது மங்கத் தொடங்கி விட்டது.

ஐரோப்பிய நாடுகளின் தலைப்புச் செய்திகள் இப்போது யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியின் பிரிட்டிஷ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் விஜயங்களால்
அலங்கரிக்கப்படுகின்றது.

இஸ்லாமியக் கற்கைகள் பேராசிரியரான இப்றாஹிம் மூஸா ‘பொருளாதார தடைகள் காரணமாக தொடர்ந்து வரும் துன்பங்களுக்கு நடுவே நாம் அமைதியாக இருப்பதன் மூலம் இத்தகைய அத்துமீறல்களின் பங்காளிகளாகவும் நாம் இருப்பதால் எமது சொந்த மனித கண்ணியத்தையும் கூட குறை மதிப்பிற்கு உட்படுத்துகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.

பேரூட்டை மையமாகக் கொண்டு செயற்படும் கத்தேலிக்கர்கள் உட்பட பல்வேறு கிறிஸ்தவ மதப்பிரிவினர்களை உள்ளடக்கிய ஒரு குழு சிரியா மீதான தற்போதைய தடைகள் உடனடியாக நீக்கப்பட வேணடும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் நிவாரண உதவிகள் துருக்கியில் இருந்து சிரியாவின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள வட மேற்கு பிரதேசத்துக்கு சென்றடைவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதால் மாபெரும் மனிதப் பேரவலத்துக்கான ஒரு வாய்ப்பு அங்கு தற்போது ஏற்பட்டு வருவதாக பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி நிவாரண நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அங்கு தற்போது ஏற்பட்டு வருவதாக பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி நிவாரண நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலை பற்றி குறிப்பிட்டுள்ள பத்தி எழுத்தாளர் பில் வான் ஓடென் சிதைவுகளுக்குள் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க சிரியா மக்கள் பெரும் பாடுபடுகின்றனர்.

இதனிடையே கடும் குளிருக்கு எதிராகவும் அவர்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது.

இவ்வாறான மோசமான நிலைமைகளின் கீழ் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அமெரிக்கா தலைமையிலான தடைகள் என்பனவும் உதவிகள் சீராக வந்தடைவதை தடுத்த வண்ணம் உள்ளன.

இன்றைய நிலையில் இது மனித குலத்துக்கு எதிரான மாபெரும் குற்றமாகும் என்று தெரிவித்துள்ளார்.

மனிதகுலத்துக்கான செயற்பாட்டு முன்னணியின் ஒத்மான் மோபில் என்பவர் வெளியிட்டுள்ள கருத்தின் படி அரசாங்கம் இதுபற்றி சரியான ஒரு உத்தரவை வெளியிட்டிருந்தால் இந்நேரம் அவசர நிவாரணப் பணிகள் யாவும் நிறைவடைந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் செயற்படும் நிவாரண தர்ம நிறுவனம் ஒன்றை மேற்கோள் காட்டியே அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகளும் உபகரணங்களும் தங்களிடம் இல்லை என்று சிரியாவின் வடமேற்கில் பணிபுரியும் டொக்டர்களும் தெரிவித்துள்ளனர்.

ஒரு நிமிடம் கூட ஓய்வோ அல்லது உறக்கமோ இன்றி ஐந்து தினங்களாக காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் தாங்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்லிப் மாநிலத்தில் உள்ள தர்கிஷ் நகரில் உள்ள அல் றஹ்மான்
ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் டொக்டர் அஹமட் கிராண்டியர் மிட்ல் ஈஸ்ட் ஐ செய்திப் பிரிவுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

காயப்பட்டவர்களாலும் இறந்தவர்களாலும் தனது ஆஸ்பத்திரி நிரம்பி வழிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதிய வளங்கள் எதுவும் இன்றி நெருக்கடி நிலையில் பணிபுரியும் ஒரு சில டாக்டர்களும் ஊழியர்களும் நிலைமைக்கு ஏற்றவாறு சோதனையான பல முடிவுகளை எடுத்து அமுல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் கவலையுடன் கூறினார்.

ஏற்கனவே கை கால்கள் முறிந்த மற்றும் மோசமான காயங்களுக்கும், தொற்றுநோய்களை ஏற்படுத்தக் கூடிய புண்களாலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கையாள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் டொக்டர்களும் மற்றும் ஊழியர்களும் அடுத்து வரும் தினங்களில் இதை விட மோசமான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கும்.

தண்ணீரால் பரவக் கூடிய வாந்திபேதி மற்றும் இதர நோய்கள் உட்பட இன்னும் சில வகையான தொற்று நோய்களும் பரவும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மீதான அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.

ஆனால் இந்தப் பிரதேசம் பாதிக்கப்பட்டு ஏழு தினங்கள் கழிந்த நிலையிலும் அவை இன்னும் உரிய செவிகளுக்கு எட்டவில்லை.

ஏற்கனவே மிகவும் சோகமான ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மீட்பு பணிகளிலும், நிவாரணம் வழங்குவதிலும் ஏனைய உதவிகளை வழங்குவதிலும் சர்வதேச சமூகமும் எம்மை கைவிட்டு விட்டதால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மேலும் அதிகரித்துள்ளன என்று டொக்டர் அஹமட் கிராண்டியர் மேலும் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்கள் இனிமேலும் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கை இப்போது மங்கி வருகின்றது.

அத்விப் மாநிலத்தில் உள்ள அல் ஷிஆ ஆஸ்பத்திரியின் தாதியர் பிரிவு தலைவர் ஹவிஷாம் தப் என்பவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர் தப்பி உறை நிலை காலநிலையில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இப்போது விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்து வகைகள் கூட இன்னும் கிடைக்கவில்லை என்று அவர் கவலையோடு கூறினார்.

ஜனாதிபதி அஸாத்தின் படையினரும் அவரது நேச அணிகளும் இந்தப் பிரதேசத்தில் குண்டுத் தாக்குதல் நடத்திய போது தனது ஆஸ்பத்திரியில் குறைந்த பட்சம் தினசரி 15 பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களைக் கையாள தேவையான அளவு மருந்துகளும், மருத்துவர்களும் தாதிமாரும் தங்களிடம் இருந்ததாகவும், ஆனால் பூகம்பத்தின் பின் இந்தத் தொகை கணிசமான அளவு அதிகரித்துள்ளதால் தங்களால் சமாளிக்க முடியாத அளவு நெருக்கடிகளுக்கு தாங்கள் முகம் கொடுத்துள்ளதாகவும் ஹவிஷாம் தப் மிட்ல் ஈஸ்ட் ஐ செய்திப்
பிரவுக்குத் தெரிவித்துள்ளார்.

பேரழிவு இடம்பெற்ற மறுநாளே பிரான்ஸின் நையாண்டி சஞ்சிகையான சார்ளி ஒரு கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது.

சேதமடைந்த ஒரு கட்டிடம், கவிழ்ந்து கிடக்கும் ஒரு கார் மற்றும் சில சிதைவுகளை உள்ளடக்கிய அந்த கார்ட்டூனுக்கு “யுத்த தாங்கிகளை அனுப்ப வேண்டும் என்ற
தேவையே இல்லை” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

அந்த சஞ்சிகையின் ஆசிரிய பீடம், அதன் வடிவமைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் எந்தளவு தரக்குறைவான மற்றும் கேவலமான
சிந்தனை உடையவர்கள் என்பதை இது போன்ற இன்னும் பல கேலிச்சித்திரங்கள் மூலம் அவர்கள் ஏற்கனவே உலகுக்கு காட்டி உள்ளனர்.

இந்த மோசமான நிலைமைகளின் பின்னணயில் தான் துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலைமான் சொயிலு கோபத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஆங்காராவில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி பிளேக்கிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் “துருக்கியில் இருந்து உங்களது அசிங்கமான கரங்களை நீக்கிக் கொள்ளுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரை எழுதப்பட்ட பெப்ரவரி 15ம் திகதி காலையில் கிடைக்கப்பெற்ற பிந்திய தகவலின் படி ஐக்கிய நாடுகள் நிவாரணங்கள் அடங்கிய வாகனம் ஒன்றுக்கு சிரியாவின் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான தற்போது கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் பிரவேசிக்க, சிரியா ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...