மின் கட்டண அதிகரிப்பு காரணமாக நீர் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என நேற்றைய தினம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முறையான ஆய்வுக்குப் பிறகு, நீர்க் கட்டண உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்க நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தயாராகி வருகிறது.
நீர்த்தேக்கங்களில் இருந்து நுகர்வோருக்கு குடிநீரை விநியோகிப்பதற்காக செலவிடப்படும் மொத்தத் தொகையில் 35 வீதம் மின்சாரத்திற்காக செலவிடப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் திகதி தண்ணீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, ஒரு யூனிட் நீருக்கான பயன்பாட்டுக் கட்டணமும், குடிநீர் கட்டணத்திற்கான மாதாந்திர சேவைக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டாலும், அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முன்னர் தெரிவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் மின் கட்டண உயர்வைக் கருத்தில் கொண்டு நீர்க் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கருதுகிறது.
இதற்கிடையில், 66 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிராக பல துறைகளைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.