சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது
கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் நேற்று வியாழக்கிழமை பேரீச்சம்பழங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அதற்கமைய சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் கலித் ஹமூத் அல்-கஹ்தானி புத்த சாசனம் மற்றும் மத கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இந்த பேரிச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இதன்போது மன்னர் சல்மான் நிவாரணங்களுக்கான மையம் உலகெங்கிலும் மேற்கொண்டு வரும் பெரும் மனிதாபிமான முயற்சிகளை சவூதி அரேபிய தூதுவர் பாராட்டினார்.
அம்முயற்சிகள் இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் பட்டத்து இளவரசர் பிரதமர் போன்றோரின் தலைமையிலான சவூதி அரேபியா அரசாங்கம் பல்வேறு சூழ்நிலைகளையும் இன்னல்களையும் எதிர்கொள்ளும் சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்கும் அந்நாடுகளிலுள்ள மக்களுக்கும் உதவுவதில் காட்டும் ஆர்வத்தை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அவ்வாறே சவூதி அரேபியாவுக்கு இலங்கைக்கும் இடையிலான வலுவான உறவுகளை தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இலங்கை மக்களுக்கு வழங்கிய அனைத்து உதவிகளுக்காகவும் சவூதி அரேபிய அரசுக்கும், இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசர் பிரதமர் முஹம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆகியோருக்கும் தனது நன்றியைத் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துக் கொண்டடார்.
மேலும் இவ்வாறு மனிதாபிமானத்தின் இராச்சியமான சவூதி அரேபியா, உலகின் அனைத்துப் பகுதிகளிலும், தாராளமான நன்கொடைகளை வாரி வழங்குவதென்பது ஆச்சரித்தக்க விடயமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
இந் நன்கொடையானது இரு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசர் பிரதமரால் பல சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்கு வழங்கும் திட்டங்களின் கீழ், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மிகவும் தேவைப்படும் குடும்பங்களைச் சென்றடையும் நோக்கோடு, வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.