இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸுடன் கலந்துரையாடியுள்ளார்.
மகாராஷ்டிராவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை உயர்ஸ்தானிகர் ரிசர்வ் வங்கி ஆளுநருடன் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை, குறிப்பாக நாணய மாற்று ஏற்பாடுகள் மற்றும் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் ஆகியவற்றின் பின்னணியில் இந்தியா இலங்கைக்கு நீடித்து வரும் ஆதரவுக்கு உயர் ஸ்தானிகர் மொரகொடா, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தாஸுக்கு நன்றி தெரிவித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை (EFF) நனவாக்குவதற்கு இந்தியா எடுத்த தலைமைக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாத கால ஏற்பாட்டிற்கு மார்ச் 20 ஆம் திகதி IMF ஒப்புதல் அளித்தது.
மேலும், இந்த சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் மின்சாரம், எரிசக்தி, துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற துறைகளில் இந்தியா ஆற்றக்கூடிய முக்கிய பங்கு குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர் கலந்துரையாடினர்.