க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் எதிர்வரும் சில தினங்களில் தீர்மானத்திற்கு வரவுள்ளது.
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க சம்மேளனத்தின் செயற்குழு நாளை விசேட கூட்டமொன்றுக்கு கூடவுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அண்மைக்காலமாக உயர்த்தப்பட்ட வரி உயர்வை திருத்தியமைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க ஆசிரியர் சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
விரிவுரையாளர்கள் குழுவின் தீர்மானம் எதுவாக இருந்தாலும், நாளை முதல் தமது உறுப்பினர்கள் வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வண. யல்வெல பன்னசேகர தேரர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கல்வி அமைச்சு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வண. யல்வெல பன்னசேகர தேரர் தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் மதிப்பீட்டு செயற்பாடுகளை நிறைவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் எனவே பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் பன்னசேகர தேரர் வலியுறுத்தியுள்ளார்.