ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக, இன்று காலை 8.45க்கு, இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று முற்பகல் விசேட ஆராதனை இடம்பெறவுள்ளது
அதேநேரம், தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற நீர்கொழும்பு – கட்டுவாபிட்டி தேவாலயத்திலும், விசேட ஆராதனை இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மென்ரசா வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய சியோன் தேவாலயத்தில் இன்று காலை விசேட ஆராதனையுடன், அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு அன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.
தாக்குதல்கள் தொடர்பான உண்மை மற்றும் நீதிக்கான திருச்சபையின் தேடலை ஆதரித்து இன்று மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்குமாறு கர்தினால் மால்கம் பேராயர் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.