குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் அமரவீர, சீனாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கு அனுமதி கோரி அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, சீனப் பிரதிநிதிகள் குழு ஒன்று, சீனாவில் தனியார் மற்றும் அரச விலங்கியல் பூங்காக்களுக்கு குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த பிரேரணையை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
குரங்குகள் கிராமப்புற விவசாயிகளின் பயிர்களுக்கு அளவிட முடியாத சேதத்தை ஏற்படுத்துவதாகவும், குறை கூறுபவர்களால் தீர்வுகளை வழங்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைகளுக்கு விஞ்ஞான ரீதியிலான தீர்வுகளை தேடி வருவதாகவும், எந்த வகையிலும் அவசர முடிவுகளை எடுப்பதில்லை எனவும் அமைச்சர் அமரவீர வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி அதிகாரிகளை விமர்சிப்பவர்களின் மாற்று யோசனைகளை அமைச்சு வரவேற்கும் என்றார்.
இந்த முடிவுகளை தாங்கள் இலகுவாக எடுக்கவில்லை என்றும், இலங்கை மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.