ஐபிஎல் சீசனில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
பெங்களூருல் நடந்த இப்போட்டியில் டொஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஜேசன் ராய் கடந்தப் போட்டியை போலவே அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 56 ரன்கள் விளாசி அணியின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இதேபோல் கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா 48 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 31 ரன்களும், நாராயண் ஜெகதீசன் 27 ரன்களும் எடுத்து அணிக்கு கைகொடுத்தனர். பெங்களூர் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா, விஜயகுமார் விஷாக் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஜெட் வேகத்தில் ரன் குவிப்பை தொடங்கினார். அவரின் அதிரடியை கட்டுப்படுத்த, கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா சுழற்பந்துவீச்சாளர் சுயாஷ் சர்மாவை அழைத்தார்.
கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றிய சுயாஷ், 3வது ஓவரில் பிளெசிஸ்சை 17 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். தனது அடுத்த ஓவரில் ஷாபஸ் அகமதுவையும் 2 ரன்களில் வெளியேற்றி ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். வருண் சக்கரவர்த்தி தன் பங்கிற்கு மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்த, ஆர்சிபி நிலைகுலைந்தது. விராட் கோலியும், மஹிபால் லோமரோரும் இணைந்து அணியை மீட்டெடுத்தனர்.
இந்தக் கூட்டணி 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது. குறிப்பாக விராட் அரைசதம் கடந்தார். அப்போது 34 ரன்கள் எடுத்திருந்த மஹிபால் லோமரோரை வருண் சக்கரவர்த்தி அவுட் ஆக்க, சில நிமிடங்களில் விராட் கோலியும் நடையைக்கட்டினார். விராட் கோலி 54 ரன்கள் எடுத்திருந்த போது ரஸ்ஸல் பந்தில் பிடிகொடுத்து வெளியேறினார். இதன்பின் வெற்றிக்கு அதிகமான ரன்கள் தேவைப்பட, பின்வரிசை வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
இதனால், ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி நடப்பு தொடரில் 3வது வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், சுயாஷ் சர்மா, ரஸ்ஸல் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.