சூடானில் தொடரும் மோதல்: உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்!

Date:

சூடானில் இராணுவம், துணை இராணுவத்துக்கு இடையே நடைபெற்று வரும் பயங்கர போரை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பெரிய நாடுகளில் ஒன்றான சூடானில் உள்நாட்டு போர் உச்சத்தை எட்டியுள்ளது. இங்கு அதிபர் அல் பஷீர் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது.

இந்த சூழலில், சூடான் இராணுவமும், துணை இராணுவமும் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு கடந்த 2021-இல் சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. சூடான் இராணுவத் தலைமை தளபதி அப்தெல் ஃபட்டாவும், துணை இராணுவத் தளபதி முகமது ஹம்தான் ஆகியோர் அங்கு ஆட்சி நடத்தி வந்தனர்.

இவர்களுக்கு இடையேயான ஒற்றுமை வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை. இராணுவத் தளபதி அப்தெல் ஃபட்டா எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளுக்கு உடன்பட மறுத்தார் துணை இராணுவத் தலைவர் முகமது ஹம்தான்.

இவ்வாறு மோதல் போக்கு நீடிக்கவே, துணை இராணுவத்துக்கு இருக்கும் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் இராணுவத் தளபதி அப்தெல் ஃபட்டா இறங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை இராணுவம் கிளர்ச்சியில் ஈடுபட, பெரும் மோதல் வெடித்தது. கடந்த சனிக்கிழமை சூடான் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் இடையே தொடங்கிய சண்டை 6 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

சூடானில் யார் ஆட்சியை கைப்பற்றப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் சண்டையாக இது மாறியதால், மூர்க்கத்தனமான தாக்குதலில் இரு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். நகரங்கள், கிராமங்கள் என சூடானின் அனைத்து பகுதிகளிலும் இராணுவமும் , துணை இராணுவமும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்கின்றன.

பீரங்கிகள், ராக்கெட் ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலமாக இரு தரப்பும் மோதிக்கொள்வதால் பொதுமக்களும் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். இதுவரை அங்கு 350 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பலி எண்ணிக்கை 5000-ஐ தாண்டும் என சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், உணவு, மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாத், தெற்கு சூடான், எகிப்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

சூடானில் வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களை சாலை, விமானம் மற்றும் கடல்மார்க்கமாக பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், கடந்த 4 நாட்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் சூடானில் இருந்து வெளியேறியுள்ளனர். ஐ.நா. படையை சேர்ந்த 700 பேரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் போர் புரியும் இருதரப்புமே அமைதிக்கு தயாராக இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...