நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது:என் இனிய நோன்பாளியே தொலைத்துவிடாதே என்னிலிருந்து பெற்ற பயிற்சியை!

Date:

இஸ்லாத்தின் ஐம்-பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு தனித்துவமான சிறப்புக்களைக் கொண்டிருக்கின்றன. இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்கும் மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரு பயிற்சிப் பாசறையாக இது மிளிர்கிறது.

நோன்பு காலம் முடிவடையும் இந்த சிறப்பான காலம் தொடர்பிலும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என சமரசம் சஞ்சிகையில் வெளியான சிறப்பு கட்டுரையை ‘நியூஸ்நவ்’ வாசகர்களுக்கு தருகின்றோம்.

நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது. ஒருமாத காலம் என்னோடு ஒன்றியிருந்தாய். எனக்காக ஊண் துறந்தாய். உறக்கம் தொலைத்தெழுந்தாய். திருமறையோடு பிணைந்திருந்தாய். தொழுதிருந்தாய். அழுதிருந்தாய். அள்ளிக் கொடுத்தாய். இச்சையைக் கட்டுப்படுத்தி நன்மையின் அடையாளமானாய். இந்த ஒருமாத காலப் பயணத்தில் நீ இறையச்சமிக்க அடியானாய் மாறிவிட்டாய். நான் மகிழ்வுடன் விடைபெற்றுச் செல்ல நினைத்தேன்.

ஆனால்…கடந்த ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டு, அதற்கும் முந்தைய ஆண்டு… பத்தாண்டு, இருபதாண்டு, நாற்பதாண்டுகளாய் இப்படித்தான் நமக்குள் உறவு இருந்திருக்கிறது. இந்த ஒரு மாதத்தில் நீ நிறையவே மாறிவிடுகிறாய். ஆனால் அடுத்த ஆண்டு உன்னிடம் வரும்போது நீ பழைய நிலையிலேயே இல்லை… அதைவிட மோசமாகக்கூட மாறிப் போய் விடுகிறாய். அதனால்தான் உன்னிடம் பேசிவிட்டுச் செல்லலாம் என முடிவெடுத்தேன்.

இந்த ஒருமாத காலப் பயிற்சியை நீ எங்கே தொலைத்தாய்? மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறாயே! அப்படியானால் இந்த ஒருமாத காலப் பயிற்சியின் அர்த்தம்தான் என்ன? எனக்காக நீ சம்பாதித்த உணவையே உண்ண மறுத்தாய். பசியடக்கியிருந்தாய். தாகித்திருந்தாய். ஆனால் நான் சென்றதும் அடுத்தவன் சொத்துக்கு நீ எப்படி ஆசைப்பட்டாய்? இறைவனுக்காக, இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற அந்த உன்னத பாடத்தை ஏன் மறந்தாய்?

இரவில் நீண்ட நேரம் நின்று வணங்கினாய். அதுவெல்லாம் நன்மையை நாடி நீ தொழுத உபரியான வணக்கம். இரவில் நீண்ட நெடிய இரக்காஅத்களைத் தொழ முடிந்த உன்னால் கட்டாயக் கடமையான இரண்டு இரக்காஅத் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழ முடியவில்லையே…! இது விந்தையாக அல்லவா இருக்கிறது.

ஒரு மாதத்தில் ஓரிருமுறை திருமறைக் குர்ஆனை ஓதி முடித்ததாய் உனக்குள்ளேயே நீ பெருமிதப்பட்டுக் கொண்டாய். ஆனால் அதன்பிறகு ஒரு நாளைக்கு ஓர் அத்தியாயம் வேண்டாம். ஒரு பக்கமாவது ஓதியிருக்க வேண்டுமல்லவா? நான் வந்தால்தான் நீ குர்ஆனையே தொடுகிறாய். உன் வாழ்விற்கு வழிகாட்ட வந்த வேதத்துடன் உன் தொடர்பு இவ்வளவு பலவீனமாக இருந்தால் நீ எங்கிருந்துதான் வழிகாட்டுதல்களைப் பெறுவாய்?

நோன்பு வைத்திருந்த காலத்தில் பொய் பேசுவதைத் தவிர்த்தாய். உன்னிடம் புறம் பேச வந்தவர்களிடம்கூட நீ கவனமாய் இருந்தாய். தீய காட்சிகள் உன் கண்களில் பட்டதும் பட்டென பார்வையை மாற்றி பிழைபொறுக்கத் தேடினாய். அதிலிருந்து தவிர்ந்து கொண்டாய். ஆனால் பெருநாள் முடிந்ததுமே அதே பொய், ஒரே புறம், தீயதைப் பார்ப்பதும், பேசுவதும், ஏசுவதும்… எப்படி உன்னால் இப்படி முடிகிறது? வியப்பாக மட்டுமல்ல பரிதாபமாகவும் இருக்கிறது. இப்படி பசித்திருந்து, ஆன்மிக வெளிச்சத்தில் மூழ்கித் திளைத்திருந்து ஒருமாத காலப் பயிற்சி எடுத்துமே உன்னால் மாறமுடியவில்லை என்றால் நீ எப்போதுதான் மாறுவாய்?

தான தர்மங்களை அள்ளிக் கொடுத்தாய். சஹர் உணவு, இஃப்தார் ஏற்பாடு என உன் சக்திக்கு மீறிக்கூட செலவு செய்தாய். ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுத்தாய். ஆனால் அதன்பிறகு உன் சட்டைப் பையை இறுகப் பூட்டிவிட்டாயே! ஒருமாத காலமாய் நோன்பிருந்தபோது பசியின் வலியை அறிந்திருந்தாய்தானே! பசிக்கிறது என்று ஒரு குரல் கேட்கும்போது உன்னால் எப்படிக் கேட்டும் கேளாமலும் கடந்து போக முடிகிறது?

இதெல்லாம் நீ எதற்காக.. யாருக்காகச் செய்தாய்? எனக்காகவா? நான் ஒருமாத கால பயிற்றுவிப்பாளன் அவ்வளவுதான். எனக்காகச் செய்ததால்தான் நான் போனதும் நீ பழைய நிலைக்குச் சென்று விடுகிறாய். இதையெல்லாம் இறைக்கட்டளையாக ஏற்று அந்த இறைவனுக்காகச் செய்தாய் என்றால் அதை நீ தொடர்ந்திருப்பாய். ரமளானில் உனக்கு யார் இறைவனாக இருந்தானோ அந்த ஏக அல்லாஹ் ஒருவன் தானே எல்லாக் காலத்துக்குமான இறைவன். அவனுடைய கருணை துளியின் நுணியளவுகூட வற்றிப் போவதில்லையே!

இன்னும் சொல்வதானால் ரமளானில் பெற்ற பயிற்சியை நீ மற்ற மாதங்களில் நடைமுறைப்படுத்தியிருக்க  வேண்டும். அந்தப் பயிற்சி யாவும் பழக்கமாகி இருக்க வேண்டும். சரி..! இப்போதாவது விழித்துக் கொள். இப்போது நான் விடைபெற்றுச் சென்றதும் நீ இந்தப் பயிற்சிகளை விட்டுவிடாதே!

என்னிலிருந்து நீ கடைப்பிடித்த ஒரே ஒரு நற்செயலை, நல்ல பழக்கத்தை நீ இறுகப் பற்றிக் கொள். ஐவேளைத் தொழுகையை ஒருபோதும் தவற விடாதே! இதை இப்போது உறுதியாகக் குறித்துக் கொள். விலங்கிடப்பட்ட ஷைத்தான் கட்டவிழ்த்து வரும் நேரத்தில் உன்னை வழிகெடுக்க முயல்வான்.

அவனுக்குப் பலியாகிவிடாதே! ஐங்காலத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதற்கு ஒரு வழி சொல்கிறேன் கேள். பள்ளியில் பாங்கொலி கேட்டதும் எந்த வேலையானாலும் அப்படியே சட்டென நிறுத்தி விட்டு எழுந்து விடு. உளுவெடுத்து தயாராகு.

இன்னும் பத்து நிமிடம் இருக்கிறதே..! இதை முடித்துவிட்டுச் செல்லலாமே! என்று நினைத்தால் தவறிவிடுவாய். தவற விட்டுவிடுவாய். முடிந்தால் வாரத்தில் ஒரு நாளாவது இரவு நேர தஹஜ்ஜுத் தொழு.

திருமறைக் குர்ஆனை ஓதாமல் ஒருநாளும் கடக்கக் கூடாது. மூன்று வேளை வயிற்றுக்கு உணவைப் போல ஒரு வேளையாவது ஆன்மாவுக்கான உணவைக் கொடு. திருமறைக்கான நேரத்தை ஒதுக்கு. தமிழாக்கம் படி. விரிவுரை தேடு. நடைமுறைப்படுத்து. எடுத்துரை. சுருக்கமாய்ச் சொன்னால் குர்ஆனிய மனிதனாய் மாறிவிடு. இறைநெருக்கத்தைப் பெற இதைவிடச் சிறந்த வழி என்ன இருக்கிறது. உன் அறிவு கூர் தீட்டப்படுவதற்கு திருக்குர்ஆனை விடச் சிறந்த கல்வி, ஞானம் இல்லை. இல்லவே இல்லை.

இதுபோன்று மாதம் மூன்று நோன்பிருக்கலாம். வாரி வழங்குவதை வழக்கமாக்கலாம். நற்செயல்களில் உயர்ந்து நிற்கலாம். இதுதான் திட்டமிடல். நான் சென்ற பிறகு நீ என்னவாக மாறப்போகிறாய் என்று உறுதியாகத் திட்டமிடு.

ஒன்று மட்டும் நினைவில்கொள். நான் இப்போது விடைபெறுகிறேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டில் நான் மீண்டும் வருவேன். அப்போது நீ இருப்பாயா தெரியாது. இருந்தால் நீ இறையச்சமுள்ள நல்ல மனிதனாய் உயர்ந்திருக்க வேண்டும். தொலைத்துவிடாதே என்னிலிருந்து பெற்ற பயிற்சியை! தொலைந்து விடாதே..!

வருகிறேன். இறைவன் நாடினால் சந்திப்போம். ஈத் முபாரக்

முர்ஷிதா அமீரா

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...