கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்த சுமார் 3,634 பேர் ஓட்டமாவடி புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டதை வெளிப்படுத்திய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அப்போதைய அரசாங்கம் இனவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சபையில் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கொவிட் 19 நோயாளர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினையை ஆராய நியமிக்கப்பட்ட செயலணியின் உறுப்பினர்களை அரசாங்கம் வேண்டுமென்றே தெரிவு செய்ததாக முன்வைத்த குற்றச்சாட்டை அமைச்சர் நிராகரித்தார்.
“பணிக்குழுவில் ஒரு நபர் மாத்திரமே கொவிட் -19 உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு எதிராக இருந்தார். எனவே, உங்கள் குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியாது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டமாவடியில் 2,992 முஸ்லிம்கள், 287 பௌத்தர்கள், 270 இந்துக்கள் மற்றும் 85 கத்தோலிக்கர்களை உள்ளடக்கிய 2,225 ஆண்களும் 1,409 பெண்களும் புதைக்கப்பட்டுள்ளனர்.