புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று புதன்கிழமை (5) மாலை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரி சம்மேளனத்தின் தலைவர் வை.எம்.நிஸ்தார் தலைமையில் இடம்பெற்றது.
புத்தளம் சர்வ மதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், புத்தளம் மாவட்ட செயலாளர் எஸ்.எச்.எம்.பி.ஹேரத், புத்தளம் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம்.ரபீக், உட்பட பொலிஸ், இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை புத்தளம் பொறுப்பதிகாரிகள், அரச அலுவலகங்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், உயரதிகாரிகள், உலமாக்கள், புத்தளம் வர்த்தகர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
மத நல்லிணக்கத்தையும் இன நல்லுறவையும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, முஸ்லிம் மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்ற புனித நோன்பின் முக்கியத்துவமும் நன்மைகள் பற்றியும், மத நல்லிணக்கம் தொடர்பிலும் சர்வ மதத் தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் அவர்களும் ஏனைய மதத்தலைவர்களும் கருத்துரைகள் வழங்கினர்.
மேற்படி நிகழ்வுகளை சிங்கள மொழியில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான ஹிஷாம் ஹூஸைன் தொகுத்து வழங்கினார்.
இதேவேளை இந்த நல்லிணக்க இப்தார் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் ஏற்பாட்டாளர்களால் அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: இன்றைய காலசூழ்நிலையில் புனித ரமழானுடைய காலப்பகுதியில் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் வகையில் நாடளாவிய ரீதியில் நடத்தப்படுகின்ற இவ்வாறான இப்தார் நிகழ்வுகள் பல இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவையும் இணக்கப்பாட்டையும் கட்டியெழுப்பும் நிகழ்வாக மாறி வருகின்றமை சிறந்த எடுத்துக்காட்டாகும்.