தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்ற அனைத்து மஸ்ஜிதுகளுக்கும் உலக முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் குறிப்பாக அல் அக்ஸா மஸ்ஜிதைச் சூழ வாழ்கின்ற பலஸ்தீன் மக்களுக்காகவும் சகல வணக்கங்களின் போதும் குறிப்பாக இரவு நேர வணக்கங்களின் போதும் துஆச் செய்யுமாறு கண்ணியத்துக்குரிய இமாம்கள், ஹாபிழ்கள், மற்றும் சகல முஸ்லிம்களிடமும் ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கிறது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம் தாஸீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஸ்ஜித்கள் அல்லாஹு தஆலாவின் இல்லங்களாகும். அவற்றை கண்ணியப்படுத்துவதும் பேணிப்பாதுகாப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.
இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் நல்லெண்ணப் பிரயாணங்கள் மேற்கொள்ளப்படாது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) என்று கூறியுள்ளார்கள்.
இப்புனிதத் தலங்கள் மூன்றையும் பாதுகாப்பதும் பராமரிப்பதும் முஸ்லிம் உம்மத்தின் நம்பிக்கைக் கோட்பாடு (அகீதா) ரீதியான கடமையாகும் எனவும் அவர் அந்த வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.