ரமழான் தொழுகையால் ஈர்க்கப்பட்ட 80 வயது நியூசிலாந்து மூதாட்டி இஸ்லாத்தை தழுவினார்!

Date:

தராவீஹில் இடம்பெற்ற உணர்வுபூர்வமான சம்பவத்தை நியூசிலாந்திலிருக்கும் மரீனா இல்யாஸ் ஷாபி எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார்.

இப்தார் முடிந்து விட்டது. மஃரிப் தொழுகை முடிந்து உணவு பரிமாறப்பட்டது . இஷாத் தொழுகையை முன்னின்று நடாத்திய என் கணவர், தராவீஹ் தொழுகையை நாடாத்துவதற்காக எழுந்து நிற்கிறார். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி ஆண்களின் தொழுகைப் பகுதியினூடாக உள்ளே நுழைவதை என் கணவர் அவதானிக்கிறார். என்ன, ஏது என்று விசாரித்தபோது தான் ஒரு பார்வையாளராக அங்கு வந்திருப்பதாகச் சொன்னார்.

என் கணவர் உடனே அவரைப் பெண்கள் பகுதிக்கு அனுப்பி அவரைக் கவனித்துக் கொள்ளுமாறு என்னிடம் சொல்கிறார். நான் அந்தப் பெண்ணை வரவேற்று உட்கார வைத்து ‘சாப்பிடுகிறீர்களா?’ என்று கேட்டேன். அவர் முகம் மலர்ந்தது. ‘என்ன சாப்பாடு?’ என்று கேட்டார் .

எங்கள் தராவீஹ் தொழுகை நியூ ஸிலாந்து ஆக்லாந்து நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்தார், தராவீஹ் எல்லாம் அங்கேயே நடப்பது வழக்கம். அந்தப் பெண்ணை உணவு வைக்கப் பட்டி ருந்த மேசைக்கு அழைத்துச் சென்று ‘விரும்பியதை எடுத்துச் சாப்பிடுங்கள். தொழுதுவிட்டு உங்களுடன் பேசுகிறேன் ‘ என்றேன்.

அவர் சரி என்று சொல்லி சாப்பிட உட்கார்ந்ததும் நான் தொழுகையில் இணைந்து கொண்டேன். இரண்டு ரக்அத்துகள் முடித்து விட்டுத் திரும்பிப் பார்த்தேன். அவர் உணவை இரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்…

நான்காம் ரக்அத்து முடித்து விட்டுத் திரும்பிய போது அவர் எங்கள் பின்னால் உட்கார்ந்து நாங்கள் தொழுவதை அவதானித்துக் கொண்டிருந்தார். தொழுது முடிந்து விட்டுப் பார்த்தபோது அவரைக் காணவில்லை…

வீடற்று வீதியோரத்தில் தூங்கும் ஒருவர் பசியினால் உள்ளே வந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், நேற்று சனிக்கிழமை இரவு அவர் மீண்டும் வந்தார். அதுவும் நேரகாலத்தோடு வந்திருந்தார்.

அவருக்கு உணவு பரிமாறிவிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து பேசுகிறேன். ‘உங்கள் தொழுகை, குர்ஆன் ஓதும்முறை எல்லாமே மனதுக்கு அமைதியைத் தருகின்றன’ என்றார்.

‘எனக்கு 27 வயதாக இருந்தபோது இஸ்லாத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இப்போது எனக்கு 80 வயதாகி விட்டது…’ என்று சிரித்தார். பற்கள் பல விழுந்து, ஒட்டி உலர்ந்த கன்னங்களும் , தோலில் தெரிந்த சுருக்கங்களும் அவர் வயதை நிரூபித்தன .
ஆனால் , சம்மந்தமில்லாமல் அவர் இடைக்கிடை சிரித்தபோது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவராக இருப்பாரோ என்று சந்தேகப்பட்டேன். அவர் தெளிவாகத்தான் பேசினார்.

‘தொழுகை முடியும்வரை இங்கேயே இருக்கப் போகிறேன். அதன் பிறகு பஸ்ஸுக்கு காத்திருக்க முடியாது. நீங்கள் போகும் வழியில் என்னை வீட்டில் விட்டுவிட்டுப் போக முடியுமா? ‘ என்று கேட்கிறார் . சரி என்று கூறிவிட்டுத் தொழுகையில் இணைகிறேன்.

தொழுகை முடிந்தபின் அவரை எங்கள் வாகனத்தில் அழைத்துச் செல்கிறோம். போகும் வழியில் நிறையப் பேசினோம். அவரது வீட்டுக்கு அருகில் வாகனம் நின்றபோது இறங்குவதற்கு முன்பு கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகள் இவைதான்:

‘அஷ்ஹது அன்லா இலாக இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு’.அல்லாஹு அக்பர்…!

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...