மதங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். இருப்பினும் பௌத்த மதத்தின் மீது அரசாங்கம் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மக்களின் கவனத்தை அன்றாட பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப அரசாங்கம் இந்த மத விவகாரத்தை கையில் எடுத்துள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
‘சுதந்திர ஜனதா சபை’ கொழும்பில் இன்று (29) நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் சில விடயங்களை திசை திருப்புவதில் தற்போதைய அரசாங்கம் சாமர்த்தியமாக செயற்படுவதாக தெரிவித்த அவர் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக மக்கள் தொடர்ந்து ஜெரோம், நடாஷா பற்றி பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலையை குறைக்க்கப்படுமா என்று கேள்வி எழுப்ப வேண்டிய நிலையில் ஃபாஸ்டர் ஜெரோமை எப்படி தண்டிப்பது ? நடாஷாவை சிறையில் அடைப்பார்களா என்பது குறித்து மக்கள் அவதானம் செலுத்துவதாக டிலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.
அரகலய மூலம் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே வெற்றிபெற்றார்.
போராட்டத்தில் செயற்பட்ட வேறு எவரும் வெற்றிபெறவில்லை எனவும் அதில் சிறப்பாக செயற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குழுவின் பிள்ளைகள் வெற்றிபெறவில்லை எனவும் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இந்நாட்டின் அண்மைக்கால வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான குற்றக் கும்பல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளதாகவும், கடந்த மாதத்தில் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.