குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு முன்னால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள இனி கால் வலிக்கக் காத்திருக்க தேவையில்லை.
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்து, கடவுச்சீட்டுக்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்துள்ளார்.
பொருத்தமான பிரதேச செயலகங்களுக்கு புகைப்படத்துடன் சென்று கைவிரல் அடையாளத்தை வழங்கி, பணத்தை செலுத்தி ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்குள் விரைவாகவும் அல்லது வழமையான சேவையின் கீழ் இரு வாரங்களுக்குப் பின்னர் வீடுகளுக்கே கடவுச்சீட்டுக்களை அனுப்பும் விசேட வேலைத்திட்டத்துக்கு தயாராகி உள்ளோம்.
ஜூன் மாதம் முதல்வாரத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. எனவே, போலியான தரகர்களுக்கு பணத்தை வழங்க வேண்டாம்.
பணத்தைப் பெறும் தரகர்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கேட்டுகொண்டுள்ளார்.