மத நல்லிணக்கத்திற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட கிறிஸ்தவ மதப் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பொறுப்பற்ற கருத்துக்களால் மத முரண்பாடுகள் உருவாகி நாட்டின் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பௌத்தம், இஸ்லாம், இந்து மதம் ஆகியவற்றுக்கு எதிரான போதகரின் விமர்சனக் கருத்துக்கள் குறித்து தேசிய பாதுகாப்புத் தலைவர் ஜனாதிபதியிடம் கவலை எழுப்பினார், இது நாட்டில் இனவாத பதட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றார்.
நாட்டில் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க எந்தவொரு நபருக்கும் இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர் தொடர்பில் ஆராய்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரபல கிறிஸ்தவ மதப் போதகரான ஜெரோம் பெர்னாண்டோ, புத்தரையும் மற்ற மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டிருந்தார்.
இது குறித்த காணொளி ஒன்று அண்மைய நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
எவ்வாறாயினும், போதகரின் இந்த கருத்துக்கு எதிராக நவ பிக்கு பெரமுன (15) கோட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், குறித்த போதகர் தெரிவித்த கருத்து தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை மதங்களுக்கு எதிரான ஜெரோமின் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் மற்றும் அவரது கடந்தகால பிரசங்கங்கள் குறித்து விசாரிக்குமாறு மூத்த பாதுகாப்புத் தலைவர்களுக்கு விக்கிரமசிங்க அறிவுறுத்தினார்.
தேசிய பாதுகாப்புத் தலைவர் உடனடியாக சிஐடி தலைவரிடம் விசாரணையை ஒப்படைத்ததுடன், ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விரிவான விசாரணையைத் தொடங்க குழுவொன்றைக் கோரினார்.
புத்தரை அவமதிக்கும் வகையில் ஜெரோமின் கருத்துக்களுக்கு எதிராக புத்தசாசன, மத மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கடும் கண்டனம் தெரிவித்ததாகவும், எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்த எவருக்கும் இடமில்லை எனவும், அத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோ தனது வீடியோவில், புத்தர் உண்மையில் இயேசுவை தேடிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு பௌத்தருக்கும் இயேசு தேவை என்று கூறினார்.
அதே பிரசங்கத்தில் இஸ்லாத்தையும் இந்து மதத்தையும் அவமதித்துள்ளார். இஸ்லாத்திற்கு எதிரான தனது பிரசங்கங்களில், முஸ்லிம்கள் அல்லாஹ்வை ‘அப்பா’ என்று கூட அழைக்க முடியாது, இஸ்லாத்தில் கடவுளுக்கு 99 பெயர்கள் உள்ளன என்று ஜெரோம் கூறினார்.
இந்து மதத்தை அவமதிக்கும் பிரசங்கங்களில், இந்துக்கள் ஏன் இவ்வளவு விலங்குகளை வணங்குகிறார்கள் என்று ஜெரோம் கேள்வி எழுப்பினார்.
அவர்களுக்கு ஏன் யானை போன்ற தோற்றமுடைய கடவுள் இருக்கிறார், ஏன் அவர்களுக்கு 10,000 கைகளைக் கொண்ட கடவுள்கள் இருக்கிறார்கள் அவர்கள் உண்மையிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தன்னை கடவுளின் நற்செய்தி பிரசங்கி, தீர்க்கதரிசி என அழைக்கும் மதபோதகர் ஜெரோம் பெர்ணான்டோ கொழும்பில் The glorious church என்ற பெயரில் வழிபாட்டு மையத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.