கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து 21 பேர் பலியான நிலையில், படகில் அதிகம் பேர் பயணம் செய்ததே படகு கவிழ்ந்ததற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.
மேலும், பயணிகள் பாதுகாப்பு ஜாக்கெட்களை அணியாதது உயிரிழப்பு அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி பகுதியில் தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசுப் படகு நேற்று மாலை 6.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், நேற்று இரவு 6.30 மணியளவில் கடைசி சவாரியாக சுற்றுலா படகு 40க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டது. படகு புறப்பட்டு சுமார் 300 மீட்டர் தூரம் சென்றதும் ஒரு பக்கமாக சாய்ந்து படகு திடீரென கவிழ்ந்தது.
படகு கவிழ்ந்ததை அறிந்து சிலர் நீரில் குதித்து நீந்திக் கரையை அடைந்தனர். படகு நீரில் கவிழ்ந்து சேற்றில் புதைந்தது. இந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட இதுவரை 21 பேர் தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 8 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
25 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அந்தப் படகில் 40க்கும் மேற்பட்டோரை ஏற்றியதே படகு கவிழ முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பயணிகள் ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சுற்றுலா பயணிகள் லைஃப் ஜாக்கெட் அணியாமல் இருந்ததும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், அங்கு படகு சவாரி மாலை 5 மணி வரையே அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 மணிக்கு மேல் படகை இயக்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
படகில் 40-50 பேர் பயணித்ததாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மூழ்கியவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.