பிரபல நடிகரும், இயக்குநருமான மனோ பாலா உடல்நலக்குறைவால் தனது 69 வயதில் இன்று (03) காலமானார்.
கல்லீரல் பாதிப்பால் சென்னை அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 15 நாட்களாக வீட்டிலேயே இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
40 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சி தொடர்கள் 3 தொலைக்காட்சி படங்கள் உள்ளிட்டவற்றை அவர் இயக்கி உள்ளதுடன் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு வெளியான தாய்மாமன் படத்தில் தொடங்கி தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள் இயக்கிய திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணைக் கதாப்பாத்திரங்களிலும் மனோபாலா நடித்துள்ளார்.
இவரது தயாரிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த சதுரங்கவேட்டை படம் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கம்ல்ஹாசனின் பரிந்துரையால் 1979ஆம் ஆண்டு ’புதியவார்புகள்’ படத்தில் இயக்குநர் பாரதி ராஜாவின் உதவியாளராக தனது திரை வாழ்கையை மனோபாலா தொடங்கினார்.
தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்டவர் மனோபாலா, ‘ஆகாய கங்கை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று (3ம் திகதி) உயிரிழந்தார்.
அவருடைய, மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.