‘புகைத்தல் பாவனையால் மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான்’:  ஓர் இஸ்லாமிய பார்வை

Date:

புகைத்தல் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 31 ஆம் திகதி ஐ.நா சபையினால் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இத்தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள விசேட அறிக்கை பின்வருமாறு..

இலங்கை உட்பட முழு உலக மக்களும் எதிர்கொள்ளும் ஆரோக்கிய ரீதியிலான அச்சுறுத்தல்களில் புகைபிடித்தல் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

தன்னிலை மறத்தல், பொழுதுபோக்கு, மனவிரக்தி, வேலைப்பளு, நண்பர்களின் சகவாசம் என்று பல்வேறு காரணங்களால் புகைத்தலை மனிதர்கள் நுகர்கின்றனர்.

புகையிலையானது சிகரெட், பீடி, குட்கா போன்ற பல வகைகளில் உட்கொள்ளப்படுகிறது. இது, குறித்த நபருக்கு மாத்திரமின்றி அவனது குடும்பம், சமூகம், நாடு என சுற்றியுள்ள அனைவரையும் பாதித்து விடுகிறது.

புகைத்தல் என்பது சாதாரண ஒரு பழக்கமாக ஆரம்பமாகின்ற போதிலும் புகைப்பிடிப்பவர் மாத்திரமல்லாமல் அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் புகைபிடிக்காதவர்களையும் உடல், உள ரீதியான உபாதைகளுக்கு உள்ளாக்கக் கூடியதாகும். மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், நாட்பட்ட இருமல் மற்றும் பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கு புகையிலை உட்கொள்ளுதல் மற்றும் புகைத்தல் காரணமாக அமைகிறது.

புகைபிடித்தல் தோற்றுவிக்கின்ற தொற்றா நோய்கள் மிகப் பயங்கரமானவை. அவற்றில் பல்வேறு விதமான புற்றுநோய்கள், நரம்புத் தொகுதி நோய்கள், இதய நோய்கள், சுவாசத் தொகுதி நோய்கள் என்பன அடங்கும்.

புகைத்தல் பழக்கத்தினால் உலகில் வருடாந்தம் 8 மில்லியனுக்கும் மேற்பட்டோர் மரணமடைகின்றனர்.

அவர்களில் 07 மில்லியன் பேர் புகைபிடித்தலின் நேரடி விளைவாக உயிரிழக்கின்றனர். 1.2 மில்லியன் பேர் புகைபிடிப்பவர்கள் வெளிவிடும் புகையை சுவாசிக்கின்ற புகைபிடிக்கும் பழக்கமற்றவர்களாவர்.

அல்குர்ஆனில் பின்வருமாறு உபதேசம் செய்கிறான். ‘உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்.’ (ஸுறா பகரா: 195)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜில் பின்வருமாறு உபதேசம் செய்தார்கள். ‘…உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். (ஹராம் – தடுக்கப்பட்டவையாகும்) (நூல்: புகாரி)

‘ஒருவர் தனக்கு தீங்கிழைப்பதும் கூடாது மற்றவர்களுக்கு தீங்கிழைப்பதும் கூடாது’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: முஸ்தத்ரகுல் ஹாகிம், 2345)

இதனடிப்படையிலேயே உயிரைப் பாதுகாத்தல், மார்க்கத்தைப் பாதுகாத்தல், புத்தியைப்; பாதுகாத்தல், மானத்தைப் பாதுகாத்தல், சொத்துக்களைப் பாதுகாத்தல் ஆகிய ஐந்து விடயங்களும் இஸ்லாத்தின் அடிப்படை நோக்கங்களாக வலியுறுத்தப்பட்டுள்ளன.

புகைத்தல் பாவனையால் மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான்.

அந்தவகையில் புகைத்தல் மார்க்கத்தின் இந்நோக்கங்களுக்கு முரணாகவும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

மனித ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவும் கெடுதலாகவும் விளங்கும் புகைபிடித்தல் மற்றும் புகையிலை பாவனை அற்ற தேசத்தை உருவாக்க ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும்.

புகைத்தல் பாவனையாளர்கள் மற்றும் அதற்கு அடிமையானவர்களை இனங்கண்டு அவர்களை அதிலிருந்து விடுபடுவதற்கான மார்க்க, உளவியல்சார் உளவளத்தணை ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்குவது அந்தந்த ஊரிலுள்ள பள்ளிவாயல் நிர்வாக சபை, மஸ்ஜித் சம்மேளனங்கள் மற்றும் ஏனைய சமூக நிறுவனங்களின் பொறுப்பாகும்.

ஒருவர் தனது புகைத்தல் பழக்கத்தை விடுவதென்பது தன்னைச் சுற்றியுள்ள தனது உறவுகள், நண்பர்களின் உயிரையும் சுற்றுச் சூழலின் தூய்மையையும் பாதுகாத்தவராக கருதப்படுகிறார்.

உலகில் 14 நாடுகள் புகையிலை மற்றும் புகைபிடித்தல் அற்ற நாடுகளாக உள்ளன.

அவ்வாறான நாடாக இலங்கையும் மாறவேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆதரவு வைக்கிறது. அல்லாஹு தஆலா எமது இளைஞர்களையும் சமூகத்தையும் மற்றும் எமது நாட்டையும் புகைத்தல் மற்றும் போதைபொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பானாக

Popular

More like this
Related

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...