தாம் கஷ்டத்தில் இருந்த போது அரசாங்கம் காப்பாற்றாத காரணத்தினால் தான் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்ததாக புத்தளம் மாவட்ட சபை உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அலி சப்ரி ரஹீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கிட்டத்தட்ட மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டு வந்த போது சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு அது தொடர்பான அபராதத்தை செலுத்தி நேற்றையத் தினம் பாராளுமன்றத்திற்கு வந்தார்.
ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அலி சப்ரி ரஹீம் ,
ஜனக ரத்நாயக்க எனக்கு எதிராக எதனையும் செய்யவில்லை. அதேவேளை நான் எந்த கடத்தலில் ஈடுபடவில்லை.
எனது உதவியாளர் ஒருவர் தான் கொண்டுவந்தார். இதை நான் ஜனாதிபதி செயலாளரிடம் கூறினேன். பிரதமரிடம் கூறினேன்
ஆனால் எனக்கு அநீதி இழைக்கப்பட்டது. தவறு செய்யாமல் ரூ. 75 இலட்சம் அபராதம் கட்டிவிட்டு வெளியே வந்தேன். அதனால்தான் அரசுக்கு எதிராக வாக்களித்தேன்.
எனக்கு இப்படிப்பட்ட அநீதி நடந்திருக்கும்போது நான் ஏன் அரசாங்கத்துடன் இருக்க வேண்டும்? இதுபோன்ற நேரத்தில் அவர்கள் என்னைக் காப்பாற்றவில்லை என்றால், அரசாங்கத்துடன் இருப்பதில் அர்த்தமில்லை. அதனால்தான். நான் அரசுக்கு எதிராக வாக்களித்தேன் என தெரிவித்துள்ளார்.