நாட்டில் இன அல்லது மத முரண்பாடுகள் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுக்கள் தொடர்பில் சில புலனாய்வு தகவல்கள் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இனக்கலவரங்கள் மற்றும் ஏனைய பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள நாடு என்ற வகையில், வன்முறையை தூண்டும் நபர்களை தடுக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென கருதுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து சமூகங்களும் இணைந்து வாழ்வதற்கான அமைதியான சூழலை உறுதி செய்வதற்கு தேவையான உத்தரவுகள் ஜனாதிபதியினால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்..