ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அனைத்து மாகாண பிரதம செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைகளுக்கு இணங்க பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆயுதப்படை மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த வாரத்தில் நாடு முழுவதும் 1,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் (49 வீதம்) பதிவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் 21 வீதமும், கொழும்பு மாவட்டத்தில் 18 வீதமும், களுத்துறை மாவட்டத்தில் 7 வீதமும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவற்றுள் கொழும்பு மாநகர சபைப் பகுதியில் மாத்திரம் 3.4 வீதமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.