கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்கள் ஒழுக்கமின்றி நடந்துக் கொள்வதாகவும் இதற்கு ஆட்சியாளர்களே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் பாடசாலைகளுக்கு சேதம் விளைவிப்பதோடு பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தாக்கியுள்ளனர், பாராளுமன்றத்தினுள் மிளகாய்த் தூள் வீசி சண்டையிடுகின்றனர், கதிரைகளை வீசி எரிந்து சண்டையிடுகின்றனர், இவற்றை முன்னுதாரணமாக கொண்டே மாணவர்களும் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வியில் தொடர்ந்தும் சீர்திருத்தம் செய்யப்படாத காரணத்தினாலேயே இந்த மாதிரியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமொன்றை முன்வைக்க தயாராகி வருகின்றனர். இவற்றை முன்வைக்க முயற்சிப்பவர்கள் நல்லவர்கள் அல்ல. ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள், மணல் கடத்துபவர்கள், கப்பம் கட்டுபவர்களே இதற்கு துணை நிற்பதாக தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்சவை விரட்டி விட்டு ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க அவருடைய விருப்பத்தின்படி உத்தரவுகளையும் சட்டங்களையும் கொண்டு வர முடியாது எனவும் நாடு சுபிட்சமாக இருப்பதாக காட்ட முயல்வது பழிக்காது எனவும் தெரிவித்தார்.
பாடசாலைகளில் இரண்டாம் தவணை ஆரம்பமாகியும் இதுவரை சீருடைகள், பாடப்புத்தகங்கள் முறையாக வழங்கப்படாமல் டெங்கு நோய் பரவும் நிலை காணப்பட்டு அவற்றிற்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமல் பாடசாலை துப்புரவு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் உள்ளன. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு கவலை இல்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.