பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவின் சேவைக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இரண்டாவது சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில் அரசியலமைப்பு பேரவைக்கு இதுவரை பரிந்துரைகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்ன 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெறவிருந்தார்.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் 06 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவரது பதவிக்காலத்தை மூன்று மாதங்களுக்கு நீடித்தார்.
இந்த விசேட பதவி நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ள போதிலும், புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான தேசபந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோர் பொலிஸ் திணைக்களத்தில் சிரேஸ்ட நிலையில் உள்ளனர்.
இதேவேளை, அரசியலமைப்பு பேரவையில் எதிர்வரும் கூட்டத்திற்கான தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் உடனடியாக மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.