ரஷ்யாவுக்கு எதிரான தனியார் படையின் கிளர்ச்சி 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டாலும், ரஷ்யா-உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சம்பவம் ஜனாதிபதி புதினுக்கு பின்னடைவாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் கிளர்ச்சி சம்பவத்தை அடுத்து, ரஷ்யா-உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும்?, தனியார் படையின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
தனியார் படையின் கிளர்ச்சி, ரஷ்ய பாதுகாப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகளை வெளிச்சமிட்டுக்காட்டியுள்ளதாக சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, அசைக்க முடியாத அதிகாரமிக்க தலைவராக கருதப்படும் அதிபர் புதினின் மதிப்புக்கு இந்த சம்பவம் சேதத்தை ஏற்படுத்திவிட்டது, அவருக்கு இது பின்னடைவுதான் என்று கூறுகின்றனர்.
வல்லரசாக கருதப்படும் ரஷ்யா, ஒரு கூலிப்படையுடன் சமரசம் செய்து கொள்ளவேண்டிய நிலைக்கு இறங்கிவிட்டதாக விமர்சிக்கின்றனர். அந்த படை, ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரை மிக சுலபமாக தங்கள் வசப்படுத்தியதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்கா கருத்து சமரச உடன்பாடு குறித்து பெலாரஸ் ஜனாதிபதி தான் தகவல் தெரிவித்துள்ளார்.
புதினோ, பிரிகோசினோ, ரஷ்ய இராணுவ உயர் அதிகாரிகளோ இதுவரை வாய் திறக்கவில்லை. இந்நிலையில், நடந்துள்ள சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்,
‘இது அசாதாரணமானது. 16 மாதங்களுக்கு முன்பு, உக்ரைன் தலைநகரை எளிதில் கைப்பற்றிவிடுவார் என்று கருதப்பட்ட புதின், இன்று தனது தலைநகரை தற்காத்திட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி, பின்னர் சமாதான கொடி பிடித்த கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோசின், இராணுவ அமைச்சர் ஷெர்ஜி ஷோய்குவை பதவிநீக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கிளர்ச்சி பரபரப்புக்கு பின் முதல் முறையாக ரஷ்ய இராணுவ அமைச்சர் ஷெர்ஜி ஷோய்கு பொது இடத்தில் தோன்றினார்.
உக்ரைனில் உள்ள தங்கள் இராணுவ வீரர்களை நேற்று அவர் பார்வையிட்ட வீடியோவை ரஷ்ய இராணுவ அமைச்சு வெளியிட்டது.
ரஷ்ய தரப்பில் உள்குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.