சிறுவன் முஹம்மது ஹம்திக்கு ஒரு வயது முதல் சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட சில அசௌகரியங்கள் காரணமாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சில காலம் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து சிறுவனின் சிறுநீரகம் ஒன்று பழுதடைந்து விட்டதாகவும் தொடர்ந்தும் சிகிச்சையளிப்பதில் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உபாதைகளுக்கும் முகம் கொடுக்க நேரிடும் என்றும் மற்ற சிறுநீரகம் சிறப்பாக இயங்குவதால் பழுதடைந்த சிறுநீரகத்தை அகற்றிவிடுவதே சிறந்தது என்று வைத்தியர்களால் சிறுவனின் பெற்றோருக்கு ஆலோசனையும் கூறப்பட்டுள்ளது.
உலகத்தில் ஒரு சிறுநீரகத்தோடு நிறைய பேர் வாழ்கிறார்கள் ஆகவே பயப்பட வேண்டிய அவசியமில்லை என்ற வைத்தியர்களின் உபதேசத்தால் ஆறுதலடைந்த பெற்றோர் தொடர்ந்தும் தமது பிள்ளை படும் அவஸ்தையை பார்த்துக் கொண்டிருக்க முடியாத காரணத்தால் வைத்தியர்களின் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டு சிறுவனின் பழுதடைந்த சிறுநீரகத்தை அகற்றி விட சம்மதம் தெரிவித்தனர்.
அதற்கேற்ப கடந்த வருடம் (2022.12.24) டிசம்பர் மாதம் கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் வைத்தியர் நவீன் விஜேகோன் அவர்களால் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சுமார் மூன்று நாட்களாகியும் குழந்தை சிறுநீர் கழிக்காமல் உடல் முழுதும் வீங்கியது.
மீண்டும் வைத்தியர்களால் ஸ்கேன் செய்யப்பட்டு குழந்தை பரிசோதனைக்குட்பட்டபோது தங்கள் கைககளால் தவறுதலாக சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டு விட்டதாக வைத்தியர்கள் கூறியதுடன் இது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு மிகப்பெரிய தவறு என்பதையும் வைத்தியர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் சொன்ன அந்த தகவலை தனது கைத்தொலபேசி மூலம் வீடியோ பதிவு செய்ய முற்பட்டபோது இந்த செய்திகளை வெளியில் சொல்லி பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று மிகவும் வினயமாகவும் தாழ்மையுடனும் வைத்தியர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த சிறுவனுக்கு பொருந்தக் கூடிய இன்னொரு சிறுநீரகத்தை தேடி மீண்டும் ஒரு சத்திர சிகிச்சை செய்து சிறுவனை பழைய நிலைக்கு கொண்டு வர தங்களால் முடியும் என்றும் அதற்காக முடிந்த உதவிகள் அத்தனையையும் செய்வதாகவும் வைத்தியர்களால் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
வைத்தியர்களைப் பகைத்துக் கொண்டால் தன் மகனின் நிலைமை இதைவிட மோசமாகுமோ என்ற பயத்தினாலும், பதட்டத்தினாலும் செய்வதறியாது திகைத்துப்போன போன பெற்றோர் வேறு வழியின்றி வைத்தியர்கள் கூறிய அந்த வார்த்தைகளை நம்பினார்கள்.
இந்நிலையிலேயே சிறுவன் முஹம்மத் ஹம்தி உயிரிழந்துள்ளான்.