பெரும்பாலும் அமெரிக்காவின் ஆலோசனையின் கீழ் சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளர் பஷர் அல் அஸாத்தை அரபு லீக்கில் மீண்டும் இணைத்து, அரபுலக சர்வாதிகாரிகள் மீண்டும் அவரை தழுவிக் கொள்ளும் இச் சந்தர்ப்பத்தில், கனடாவும் நெதர்லாந்தும் அவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளன. தமது சொந்த நாட்டு மக்கள் மீது போர் குற்றங்களைப் புரிந்துள்ளார் என்பது தான் அவர் மீதான பிரதான குற்றச்சாட்டு.
சில அறிக்கைகளின் படி சர்வதேச நீதிமன்றத்துக்கு இவ்விரண்டு நாடுகளும் சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் “அஸாத் சர்வதேச சட்டங்களை எண்ணற்ற விதத்தில் மீறியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரவதைகள், ஏனைய வகையான கொடூரங்கள், மனிதாபிமானமற்ற விதத்தில் அல்லது தரக்குறைவான முறையில் மனிதர்களை நடத்தியமை, அவ்வாறான தண்டனைகளை வழங்கியமை, பலாத்காரமாக காணாமல் ஆக்கப்பட்டமை, பாலியல் மற்றும் பால் அடிப்படையிலான வன்முறைகள், சிறுவர்கள் மீதான உரிமை மீறல்கள் என இந்தக் குற்றச்சாட்டுப் பட்டியல் நீண்டு செல்வதாக சர்வதேச நீதிமன்றம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்கயைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் 15 வீதம் மட்டுமே ஷீஆக்கள் உள்ளனர். ஆனால் 1970 முதல் அந்த நாடு சிரியாவின் ஷீஆ பிரிவு இராணுவ சர்வாதிகாரி ஹாபிஸ் அல் அஸாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
அவர் இராணுவ சதிப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் பஷர் அல் அஸாத்தும் தந்தைக்கு ஒப்பீட்டளவில் எந்த விதக் குறைவும் இன்றி அதே பாணியிலான சர்வாதிகார ஆட்சியைத் தொடருகின்றார்.
2011ல் அரபு வசன்தம் ஏற்பட்ட போது சிரியா மக்களும் அடிப்படை சுதந்திரத்துக்கான உரிமை குரல் எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால் அஸாத் பதிலுக்கு அந்த மக்கள் மீது காட்டுமிராண்டித் தனத்தையும், மூர்க்கத்தனத்தையும் கட்டவிழ்த்து விட்டு வரலாற்றின் இடைக்கால பாணியில் பதில் அளித்தார். மக்கள் அதை எதிர்த்தனர்.
ஆனால் பஷர் அல் அஸாத் அந்த மக்கள் எழுச்சிக்கு பதிலாக ஒவ்வொரு கிராமம் கிராமமாக, ஒவ்வொரு நகரம் நகரமாக குண்டு வீசி தகர்த்து மனித உயிர்களையும் வகை தொகை இன்றி பலியெடுத்தார். தனது சொந்த நாட்டை அவரே பலவீனப்படுத்தினார்.
அதன் மூலம் இஸ்ரேலை அவர் பாதுகாப்பானதாகவும் உறுதியானதாகவும் ஆக்கினார். அதற்கு ஈடாக அமெரிக்கா இந்த யுத்தக் குற்றவாளிக்கு பூரண பாதுகாப்பை வழங்கியது.
அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் மற்றும் அரபுலக சர்வாதிகாரிகள் ஏன் அஸாத்தை காப்பாற்ற நினைக்கின்றார்கள் என்பது பற்றி பத்தி எழுத்தாளர் கலாநிதி அமீரா அபு அல் பெட்டோஹ் தனது கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா அஸாத்தின் கொடிய ஆட்சிக்கு பாதுகாப்பை வழங்கியது. வாஷிங்டனின் வெளிப்படையான உத்தரவுகள் எதுவும் இன்றி கசாப்புக்கடைக்காரன் பஷரை தனது நாட்டுக்கு வரவழைக்கவோ அல்லது மீண்டும் அவரை தன்னோடு இணைத்துக் கொண்டு வரவேற்பு அளிக்கவோ சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஒருபோதும் இணங்கி இருக்கமாட்டார். இத்தகைய பங்களிப்புக்களைத் தான் அமெரிக்காவும் ஏனைய காலணித்துவ சக்திகளும் வழங்கி வருகின்றன.
இந்த கசாப்புக்கடைக்காரன் தனது சொந்த மக்களுக்கு எதிராக பொஸ்பரஸ் கொத்தணி குண்டுகளையும் பீப்பாய் வெடிபொருள்களையும் பாவித்து அவர்களைக் கொன்று குவித்தவன்.
பத்துலட்சத்தக்கும் அதிகமான மக்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் பலவந்தமாக தமது தாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவனது சிறைச்சாலைகள் கூட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களால் நிரம்பி வழிகின்றன. அங்கே அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டும் மிகவும் பயங்கரமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டும் வருகின்றனர்.
பல நகரங்களின் கட்டிடங்களில் மக்கள் உள்ளே இருந்த நிலையில் அவற்றைத் தரை மட்டமாக்கியும் தீக்கிரையாக்கியும் அழித்து விட்டு, நாட்டின் சுமார் 70 வீதமான உள்கட்டமைப்பை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டு ரஷ்யாவினதும் ஈரானினதும் ஆக்கிரமிப்புக்காக தனது நாட்டின் கதவுகளைத் தாராளமாகத் திறந்து விட்டார். எஞ்சியிருந்த சிரியா மக்களை இந்த ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
2011 அரபு வசன்த புரட்சி அரபுலகை ஒட்டு மொத்தமாக அதிர வைத்தது. கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கால்களில் நடுக்கம் எடுத்தது.
எகிப்தின் ஹொஸ்னி முபாரக், துனீஷியாவின் செய்த் அல் ஆபிதீன் பின் அலி, லிபியாவின் முஅம்மர் அல் கதாபி, யெமனின் அலி அப்துல்லாஹ் சாலேஹ் போன்றவர்கள் இந்த நடுக்கத்தால் வீழ்ந்தனர். சிரியாவின் அஸாத் போன்ற மேலும் சிலர் தமது முடிவுக்காக காத்திருந்தனர்.
அஸாத் வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளித்தார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் அவர் பாதுகாக்கப்பட்டார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் அடிபணிவதை அஸாத் தேர்ந்தெடுத்தார்.
தனது பிராந்திய சகாக்களின் விதியைப் பார்த்த பின் தான் ஏற்படுத்திய தனது நாட்டின் சிதைவுகளின் உச்சத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு கைப்பொம்மையாக இருப்பதை அவர் தெரிவு செய்தார்.
அரபு வசன்த புரட்சியால் அதிர்ந்து நடுக்கம் எடுத்தது சிரியாவின் சர்வாதிகாரிக்கு மட்டும் அல்ல. அவரோடு சேர்த்து ஒட்டு மொத்த அரபுலக சர்வாதிகாரி மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் இந்த நடுக்கம் ஏற்பட்டது.
தத்தமது மக்களும் அவர்களின் சுதந்திரத்துக்கும் உரிமைக்கும் சுய கௌரவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் குரல் கொடுப்பார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள். தமது மணிமகுடங்கள் வீழ்ந்து விடும் என்ற அச்சம் அவர்களைப் பற்றிக் கொண்டது.
அதனால் அவசரஅவசரமாக அவர்கள் சியோனிஸ எதிரிகளுடன் கூட்டணிகளை அமைத்துக் கொண்டார்கள். அப்போது இந்த மக்கள் எழுச்சியால் சியோனிஸமும் சற்று குழப்பமடைந்திருந்தது.
சிரியாவின் ஆட்சி பீடத்தில் அஸாத்தை வைத்திருக்கும் தனது விருப்பத்தை இஸ்ரேலின் பென்ஜமின் நெத்தன்யாஹு ஒரு போதும் இரகசியமாக வைத்திருக்கவில்லை.
பஷரின் தந்தை ஹாபிஸ் அல் அஸாத் 1967ல் சிரியாவுக்கு சொந்தமான கோலான் குன்று பிரதேசத்தை சியோனிஸ்ட்டுகளிடம் கையளித்தார். மகன் அஸாத்தைப் போலவே அவரும் ஒரு கொடிய ஆட்சியாளர். ஹமா நகரில் இனஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டவர்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிரியா மக்களை அச்ச நிலைக்கு கொண்டு வந்து அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கி அடக்கி ஒடுக்கி அந்த நகரின் செல்வங்களை கொள்ளையிட்டவர்.
துரோகம் என்பது அஸாத்தின் இரத்தத்தில் மிக ஆழமாக ஊறிப் போய் உள்ளது. தந்தைக்குப் பின் ஆட்சியை அபகரித்துக் கொண்ட மகன் அஸாத் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு துப்பாக்கி ரவையைக் கூடப் பயன்படுத்தாமல் மிக நீண்டகாலமாக ஆட்சிக் கதிரையை அலங்கரித்த வண்ணம் உள்ளார். அதனால் தான் அவர் பதவி விலக வேண்டும் என்று முடிவு கூட வீட்டோ அதிகாரத்தால் நிராகரிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகம் புரட்சிக்கு எதிரான இயக்கத்தின் மத்திய நிலையமாக உள்ளது. இஸ்ரேலின் மொஸாட் உளவுத்துறை இந்த ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பக்கபலமாக உள்ளது. சிரியா, லிபியா மற்றும் குறிப்பாக யெமன் ஆகிய நாடுகளில்; ஏற்பட்ட அரபு வசன்தம் அமீரகத்தில் இருந்து தான் இரத்தக்கரை படிந்த இளையுதிர் காலமாக மாற்றப்பட்டது.
அடிப்படை உரிமைகளுக்காக, சுய கௌரவத்துக்காக, சுதந்திரத்துக்காக அல்லது ஜனநாயத்துக்காக யாராவது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அல்லது ஈடுபட நினைத்தால அவர்களுக்கு அச்சத்தை ஊட்டி கசக்கிப் பிழிவது தான் இதன் அடிப்படை நோக்கம்.
இஸ்ரேல் ஆதரவு அமெரிக்கா, சவூதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பன சிரியா புரட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தன. சிரியா மக்கள் பாரிய தியாகங்களைப் புரிந்தனர். காரணம் எல்லோருமே தரைமட்டத்துக்கு நசுக்கப்பட்டனர்.
அருகில் இருந்தும் தூரத்தில் இருந்தும் சர்வதேசக் கழுகுகள் சிரிய மக்களின் உடல்களைக் கிழித்து எறிந்தன. உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் எந்த வழியிலாவது நாட்டை விட்டு தப்பி ஓட முயன்றனர். அவ்வாறான முயற்சிகளில் சிறுவர்கள் உற்பட பலர் கடலுக்கும் பலியானர்.
சிரியா புரட்சி காரணமாக அந்த நாட்டின் நண்பர்கள் என முன்னர் தம்மை இனம் காட்டிக் கொண்ட பலரும் கூட அந்த மக்களை கைவிட்டனர். ஆனால் எஞ்சியதில் இருந்து தங்களது பங்குகளை மட்டும் அவர்கள் கொள்ளை அடித்துக் கொள்ளத் தவறவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது தம்மை படைத்தவன் மீது முழுப் பாரத்தையும் ஒப்படைத்து விட்டனர்.
போராட்டத்தின் போது ஆயுதங்களை வழங்கி தம்மை ஆதரித்தவர்களை அவர்கள் நம்பினர். ஆனால் அந்த நாடுகள் இப்போது பிராந்திய நலன்களுக்காக சிரியா மக்களுக்கு முழுமையாக துரோகம் இழைத்து விட்டன. தாரா, அலப்போ, ஹொம்ஸ், ஹமா ஆகிய இடங்களில் இந்த நிலையை வெளிப்படையாகக் காண முடிகின்றது.
சிரியா இவ்வாறே தனது நேச அணிகளையும், உறவுகளையும் காட்டிக் கொடுத்து துரோகம் இழைத்துள்ளது. இருந்தாலும் இந்தக் கதை இன்னும் முடியவில்லை. இதன் முடிவு இன்னும் எழுதப்படவில்லை.
யுத்தங்களைப் போலவே புரட்சிகளுக்கும் தீர்க்கமான முடிவுகளுக்கு வருகின்ற அந்த நொடிப் பொழுது வரை ஏற்ற இறக்கம் இருக்கவே செய்யும். பஷர் அல் அஸாத்தின் நீடிக்கும் ஆட்சியும் கொண்டாட்டங்களும் மக்களை ஏமாற்றாமல் இருக்கட்டும்.
சுதந்திர சிரியாவை நேசிக்கும் ஒவ்வொரு சிரியா பிரஜையின் இதயத்துக்குள்ளும் புரட்சியின் தீக்கதிர்கள் இன்னமும் எரிந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை சரியாக ஒருங்கிணைக்கப்பட்டு மூட்டப்படும் வரை அவர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
அவ்வாறு காத்திருப்பவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளாள் அதற்கான நாள் என்பது மிக அண்மையில் இருக்கலாம்.
அதேவேளை இப்போது காயப்பட்டு, நோய்வாய்ப்பட்டுள்ள சிரியாவை மீண்டும் ஒரு கசாப்புக்கடைக்காரன் தழுவிக் கொள்ளப் போகிறான்.
இன்று சிரியா அகதிகளுக்கு மிகவும் தேவைப்படுவது உணவு நிவாரணம்.
சுமார் 12 வருடங்கள் கழித்து இன்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 90 வீதத்துக்கும் அதிகமான சிரியா மக்கள் பட்டினி கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பதாக மதிப்பிட்டுள்ளது. 15 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.
கடந்த பல வருடங்களாக இதே நிலை தான் அங்கு நீடித்துள்ளது. சிரியாவின் உள்கட்டமைப்பு முழுமையாக சரிந்து விழும் ஆபத்து அவசர கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது என்று செஞ்சிலுவை சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.