சுவீடன் நாட்டில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டது தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலக முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளை கடந்த மாதம் 21 ஆம் திகதி சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டோன் நோபியா பள்ளிவாசலுக்கு வெளியே அல்குர்ஆனுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் அதைத் தீயிட்டுக் கொழுத்தியமையை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாக கண்டிக்கிறது.
கோடிக்கணக்கான முஸ்லிம்களின் இதயங்களைப் புண்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த இழி செயல் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
உலக முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத சுவீடன் நீதிமன்றம் இப்பாதகச் செயலை மனித உரிமைகள் என்ற வகையில் அங்கீகரித்திருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அதேவேளை உலக கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தலைவர் பாப்பாண்டவர் அவர்கள் இச்செயலை கண்டித்துள்ளமையை முஸ்லிம் உலகம் மகிழ்வோடு வரவேற்கிறது.
இதுபோன்ற மத நிந்தனை விவகாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவும் இப்படியான நிகழ்வுகள் இனி நடைபெறாதிருக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உலக முஸ்லிம்களின் கோரிக்கையோடு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியும் இணைந்து கொள்கிறது எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.