பேராதனை போதனா வைத்தியசாலையில் சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஐந்து விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய இந்த குழு நாளை சனிக்கிழமை பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்ட தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்தவில்லை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இரசாயன பகுப்பாய்வு விசாரணையின் ஊடாக விசாரணைக்குழு அதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசி போடப்பட்ட 12 பேர் தற்போது பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாமோதி சந்தீபனி என்ற யுவதி வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த திங்கட்கிழமை கட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் அன்றிரவு பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். என்றாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருந்ததார்.
இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயார்களுக்கு ஏற்படுள்ள ஒவ்வாமையால் உடனடியாக இங்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து விசாரணைகளை நடத்த வேண்டுமென முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் பிரகாரம் இவ்வாறு ஐவர் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.