சட்டதரணி மாஸ் எல். யூசுஃப்
கலாநிதி ரொஹான் குணரத்ன ‘Sri Lanka’s Easter Sunday Massacre’ (இலங்கையின் உயிர்த்த ஞாயிறு சம்ஹாரம்)’ என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் எழுதிய நூலின் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் ஒன்று எனக்கு தற்செயலாகக் காணக் கிடைத்தது.
விழாவானது 2023 ஜுலை 28 நடைபெறவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த உடனேயே அதன் ஒரு பிரதியை நானும் வாங்க முடிவு செய்தேன்.
அதன் பின் அழைப்பிதழில் ஒரு பக்கத்தில் சில கூற்றுக்கள் அச்சிடப்பட்டுள்ளதை கண்ணுற்றேன்.
அதை வாசித்த நான் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன். காரணம் அதில் உண்மைக்கு மாற்றமான மற்றும் திரிக்கப்பட்ட சில தகவல்கள் இருந்தமையே.
அவை நூலில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களா அல்லது அது பிரசுரகர்த்தாக்களின் நூலின் வெளியீடு சம்பந்தமான வேலையா என்பது எனக்கு தெரியாது.
இருந்தாலும் அக்கூற்றுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆவலை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
ஏனெனில் அவை முஸ்லிம்களை குற்றவாளிக் கூன்றில் நிறுத்துபவயாக இருந்தன. அக்கூற்றுக்களை நான் கீழே வரிசைப்படுத்தி என்னுடைய விளக்கங்களையும் தந்துள்ளேன்.
1. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அமெரிக்காவில் அல் கயிதா அமைப்பு மேற்கொண்ட 9/11 தாக்குதல்களுக்கு அடுத்தப்படியான மிக பயங்கரமான தாக்குதலாகும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது உண்மையல்ல. 9/11 தாக்குதல் 2001 ஆம் அண்டில் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் 2020 ஆம் ஆண்டில், ‘மை-கத்ரா சம்ஹாரம்’ என பிரபல்யம் அடைந்த ஒரு பாரிய பயங்கரவாத தாக்குதல் எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் சம்ரி போராளிகளால் மேற்கொள்ளப்பட்டது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கான பணிப்பாளர் டிப்ரோஸ் முச்செனா இத்தாகுதல் பற்றி கூறுகையில் ‘இத்தாக்குதல் மூலம் பாரிய எண்ணிக்கையிலான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை நாம் உறுதிப்படுத்துகின்றோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 500 பேர் மரணித்ததாக அரச ஊடகம் தெரிவித்ததுடன் 766 பேர் மாண்டதாக ஏனைய ஊடகங்கள் கூறின. இது தவிர ஐ.நா அகதிகள் ஏஜன்சி அறிக்கைப்படி நவம்பர் 11 வரை, தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 7,000 அகதிகள் மேற்கு டிக்ரே மாநிலத்திலிருந்து அண்டை நாடான சூடானுக்கு தப்பிச் சென்றனர்.
அது தவிர ‘கிறிஸ்தவ தீவிரவாதிகள்’ என்றும் அழைக்கப்படும் LRA போராளிகள் கொங்கோ சனநாயகக் குடியரசில் 2008 டிசம்பர் மாதம் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக சுமார் 865 மக்கள் கோடாரிகள் மற்றும் அறுவால்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர் என ஹியுமன் ரயிட்ஸ் வொச் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
‘நத்தார் தாக்குதல்’ என்றும் பிரசித்திப் பெற்ற இத்தாக்குதலின் பின் குறைந்தபட்சம் 160 சிறார்களை போராளிகள் பிடித்துச் சென்றனர்.
அதன் பின் 2009 டிசம்பர் மாதத்தில் அதே பயங்கரவாத அமைப்பு கொங்கோ குடியரசில் மகொம்போ பிரதேசத்தில் மேற்கொண்ட மற்றுமொரு தாக்குதலில் 321 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஹியுமன் ரயிட்ஸ் வொச் அமைப்பு உறுதி செய்தது.
2. உலகளாவிய விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத அடிப்படையிலான பயங்கரவாத தாக்குல்களின் ஆணி வேர் சலஃபி ஜிஹாத் கோட்பாட்டிலேயே காணப்படுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது உண்மையல்ல. பல ஆண்டுகளுக்கு முன் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த சீக்கிய பயங்கரவாதிகள் எயார் இன்டியா விமானம் ஒன்றை குண்டுத் தாக்குதலால் வீழ்த்திய போது அதில் இருந்த 329 பேர் கொல்லப்பட்டனர். அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.
அது தவிர மேலே குறிப்பிட்ட LRA பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குத்லகளின் குறிக்கோளாக அவர்கள் குறிப்பிட்டது யுகண்டாவில் பைபிளில் கூறப்பட்டுள்ள பத்து கட்டளைகள் அடிப்படையிலான ஆட்சியை ஏற்படுத்துவதாகும். இங்கும் இஸ்லாம் தொடர்பாகவில்லை. ஆனால் கலாநிதி குணரத்ன இவை எவற்றையும் கண்டுகொள்ளாமல் ஒட்டு மொத்தமாக பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆணிவேர் இஸ்லாத்திலேயே இருப்பதாக குறிப்பிட்டுள்ளமை வெறுக்கத்ததாகும்.
3. தனித்துவ மற்றும் தீவிரவாத கொள்கைகளை வலியுறுத்தும் நமது மதத் தலைவர்களை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்வது? என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது உண்மையல்ல. முஸ்லிம் மதத் தலைவர்கள் உட்பட அனைத்து மதங்களில் தலைவர்களும் சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு, சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்த பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால் எந்தவொரு சமூகத்தின் மதத்தலைவர்கள் மத்தியில் ஒரு சில அடாவடிப் பேர்வழிகள் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அது போன்ற மோசமானவர்களை ஒரு சமயத்தின் அளவுகோலாக கொள்ள முடியாது.
உதாரணமாக, அன்மையில் இலங்கையரான ஒரு பௌத்த பிக்கு ஜப்பானில் ஒரு இளைஞனை ஓரின பாலுறவிற்கு வற்புறுத்திதையோ அல்லது சில வாரங்களுக்கு முன் இலங்கையில் ஒரு பௌத்த பிக்கு இரு பெண்களுடன் நடத்திய காம லீலைகளை ஒட்டுமொத்த பௌத்த மத குரு சமூகத்தை மதிப்பீடு செய்யும் அளவுகோலாக பயன் படுத்துவது நியாயமாகுமா? நிச்சயம் நியாயமாகாது.
ஆனால் முஸ்லிம் மதத் தலைமைகள் தொடர்பான கருத்துக் கூறல்களை மேற்கொள்ளும் போது அவர்கள் விடயத்தில் இந்த நியாயங்கள் கருத்தில் கொள்ளப்படாமல், ஒருவரின் செயலை வைத்து அனைத்து பேரையும் அளவிடும் போக்கு காணப்படுகின்றமை கவைலக்குறியது.
4. தீவிரவாத கருத்துக்கள் உள்ள பிரசுரங்கள், வெளிநாட்டு போதகர்கள் மற்றும் சர்ச்சைக்குறிய அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என முற்போக்குவாத மததத்லைவர்கள் ஏன் வலியுறுத்தி வருகின்றார்கள்? என அதில் கேள்வி எழுப்பப்ட்டிருந்தது.
இதை வாசிப்பவர்கள் தவறாக நினைக்கக் கூடும். மேற்படி வலியுறுத்தல்களை மேற்கொள்ளும் முற்போக்குவாத மதத்த தலைவர்கள் யார்? தடையை நீக்க வேண்டும் என அவர்கள் வற்றுபுறுத்தும் பிரசுரங்கள் எவை? சர்ச்சைக்குரிய போதகர்கள் மீதான தடையை நீக்குமாறு யார் வலியுறுத்தினார்கள்? இவை அனைத்தும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளாகும். உண்மையில் இது பற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேசும் போது நானும் அங்கிருந்தேன்.
5. இறுதியாக, அதில் குறிப்பிடப்பட்டிருந்த மிகவும் ஆபத்தான ஒரு விடயம் என்னவென்றால், ‘அடுத்த தாக்குதலால் நாம் துன்புறும் வரை காத்திருக்க வேண்டுமா அல்லது திட்டமிடப்பட்டு வரும் தாக்குதலை தடுப்பதற்கு எமது புனிதமான மதஸ்தலங்களை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?’ என்பதாகும். இந்த வார்த்தைகள் தீர்க்கதரிசனம் போல ஒலித்தாலும் அவை எனக்குள் ஒரு பெரும் அச்சத்தையே ஏற்படுத்தியது.
‘அடுத்த தாக்குதல்’ மற்றும் ‘திட்டமிடப்பட்டு வரும் தாக்குதல்’ என்ற வார்த்தைகளைப் படித்ததும் ஒரு கணம் என் கற்பனை கட்டுப்பாட்டை இழந்தது. இது, முஸ்லிம் சமூகம் மற்றும் அதன் மதத் தலைவர்கள் மீது வீண் பழியைப் போடுவதற்கான ஒரு முஸ்தீபாக இருக்குமோ எனக்குத் தோன்றியது. உடனே ‘சும்மா பைத்தியக்காரன் போல யோசிக்காதே’ என எனக்கு நானே கூறிக்கொன்றேன்.
யாராவது என்னிடம், ‘இன்னும் புத்தகத்தை வாங்கும் எண்ணம் உமக்குண்டா?’ என்று கேட்டால், ‘இல்லை, நான் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்’ என்றே கூறுவேன்.
ctcolumn@yahoo.com என்ற மின்னஞசல் முகவரி ஊடாக கட்டுரை ஆசியரை தொடர்பு கொள்ளலாம்.