புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கம் (PUTWA)க்கும் புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு (DIRC – Puttalam)க்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த 5 ஆம் திகதி புத்தளம் பெரிய பள்ளியில் நடைபெற்றது.
புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தில் இந்து, கத்தோலிக்க, பௌத்த, இஸ்லாம் சமயத்தவர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
எனவே, எமது அங்கத்தவர்களின் சமயங்களில் சிறப்பான தினமொன்றை அனுஷ்டித்தல் என்ற தீர்மானத்தின் பிரகாரம் ஜூன் 29 ஆம் திகதி இடம்பெற்ற இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாளை அனுஷ்டிக்கும் நோக்கத்துடன் இச்சந்திப்பு நடைபெற்றது.
இச்சர்வ மத வர்த்தகர் சந்திப்பில் கத்தோலிக்க பாதிரி யொஹான் தேவராஜா, ரத்திணராஜா ரத்திணமலர், மலர் லுவிஸ் கன்னியாஸ்திரிகள், இந்து குருக்களான சிவ ஸ்ரீ பாலநாத், சிவ ஸ்ரீ சுவீகர குருக்கள், மௌலவிமார்களான அஷ்ஷெய்க் முஜீப் ஸாலிஹ், அஷ்ஷெய்க் ஷிஹான் யூசுபீ ஆகியோர் கலந்துகொண்டதுடன் நல்லுபதேசங்களையும் வழங்கினார்கள்.
PUTWA மற்றும் DIRC – Puttalam நிருவாகத்தினரும் உறுப்பினர்களும் கலந்துகொண்ட இச்சந்திப்பில், PUTWA தலைவர் Y.M. நிஸ்தாத் வரவேற்புரையை நிகழ்த்தியதோடு, அதன் கூட்டுனர் ஹிஷாம் ஹுஸைன் இச்சந்திப்பின் நோக்கத்தையும் விவரித்தார்.
இதேவேளை நிகழ்ச்சியின் முடிவில் கலந்துகொண்டோருக்கு பெருநாள் பலகார விருந்தும் வழங்கப்பட்டது.