இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டுமொரு தடவை பதவியில் இருப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கு பின் வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணி, முழு உலகையும் வெற்றிகொண்டது தமது ஆட்சியில்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
”வெளிநாடுகளுடன் இருந்த சுமூகமற்ற உறவுகளை மீள புதுபித்து வலுப்படுத்தியது என ஆட்சிக்காலத்தில்தான். நாட்டுக்கு நன்மை பயக்கும் பல உடன்படிக்கைகளையும் கைச்சாத்திட நடவடிக்கைகளை எடுத்திருந்தேன்.
தற்போது தொழிலதிபர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லை. மீனவர்களோ, பொதுமக்களோ மகிழ்ச்சியாக இல்லை. பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
இப்போதெல்லாம், பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்பதை நாங்கள் உணர்கிறோம்.
நாம் அதை செய்ய முடியும். ஒரு கட்சி என்ற ரீதியில் அவர்களுக்கான தீர்வுகள் எங்களிடம் உள்ளன. போதைப்பொருளை முற்றாக பாடசாலைகளில் இருந்து ஒழிப்பது கட்டாயம். இது மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்ற வகையில், முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் பதவி வகிப்பதற்கு எனக்கு எந்த சிரமமும் இல்லை“ என தமது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.