தென் மாகாணம் – மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமம் ஒன்றில் மையவாடியில் அடக்கம் செய்யப்படும் ஜனாஸாக்கள் சிலவற்றின் மண்டையோடு, எலும்புகள் முதலான உடற்பாங்கள் மர்மமான முறையில் தோண்டி எடுக்கப்பட்டு அகற்றப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரி தென்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவிற்கு கடிதம் மூலம் அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.
“மாத்தறை மாவட்டத்தில் மாலிம்மட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியான தெலிஜ்ஜவில, ஹொரகொடவில் ஏறத்தாழ 150 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மீரான் ஜும்ஆ பள்ளிவாசல் அங்குதான் அமைந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து சற்று தொலைவிலேயே பிரஸ்தாப முஸ்லிம் மையவாடி அமைந்துள்ளது. அந்த பகுதியில் சில முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றனர். ஆள் நடமாட்டமும் அங்கு குறைகுறைவாகவே காணப்படுகின்றது.
இது சம்பந்தமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 2023.06.08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் பொழுது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை ஏற்றுக் ஏற்றுக்கொண்டுள்ளதோடு அதனை தடுப்பதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னரும், சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 2023.07.03ஆம் திகதி அல்லது அது அண்மித்த நாளில் இந்த முஸ்லிம் மையவாடியிலிருந்து 16 மாதங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயோதிப பெண்ணின் மண்டையோடு அகற்றப்பட்டு இருக்கிறது.
அவ்வாறே, மூன்று மாதங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட 72 வயதான ஜெலீல் என்பவரது ஜனாஸாவை அகற்றும் முற்சியும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அது பற்றி மாலிம்மட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதன் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி எனக்கு அறியப்படுத்துங்கள்“ என குறிப்பிட்டுள்ளது.
ஏன் இவ்வாறு ஜனாஸாக்களின் உடற்பாகங்கள் களவாக அகற்றப்படுகின்றன? என்று கேட்டபோது, பொதுவாக பில்லி, சூனியம் போன்ற செய்வினைகளுக்கு இவ்வாறான உடற்பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுவதாகவும், சில வேளைகளில் அவை மருத்துவம் கற்கும் மாணவர்களுக்கு விற்கப்படுவதாக எண்ணுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.