கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த சீனப் பெண்ணை தாக்கி அவரது செல்போனை கொள்ளையிட முயற்சித்த இரண்டு பேரை நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
சீனப் பெண் ரயிலில் பயணித்தவாறு சுற்றியுள்ள காட்சிகளை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துக்கொண்டிருந்த போது ரயில் பாதையில் கொள்ளையிடும் நோக்கில் இருந்த இளைஞர்கள் பொல்லால் சீனப் பெண்ணை தாக்கியுள்ளனர்.
லியூ குயீன் என்ற சீனப் பெண் தனது கணவர், மகளுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளதுடன் வழிக்காட்டி ஒருவருடன் நேற்று பதுளை எல்ல பிரதேசத்திற்கு பயணம் செய்துள்ளார்.
சீனப் பெண் ரயிலின் ஜன்னல் வழியாக வெளியில் உள்ள காட்சிகளை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துக்கொண்டு பயணித்துள்ளார்.
ரயில் நாவலப்பிட்டி இங்குருஓய ரயில் நிலையத்திற்கு அருகில் செல்லும் போது ரயில் பாதைக்கு அருகில் நின்றிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் நீண்ட பொல்லால் சீனப் பெண்ணின் கை மீது தாக்கியுள்ளார். இதனால், பெண்ணின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இளைஞர்கள் தாக்குதவது சீனப் பெண்ணின் செல்போனில் பதிவாகியுள்ளது.
சீனப் பெண் சம்பவம் குறித்து தம்மை வழிகாட்டி அழைத்துச் செல்லும் நபருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து முறைப்பாடு ஒன்றை வழிக்காட்டியின் ஊடாக சீன மொழியில் இருந்து சிங்களத்திற்கு மொழிப் பெயர்த்து, பதிவு செய்த காட்சிகளுடன் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.
கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார், இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர். மற்றுமொரு இளைஞரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.