4 மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததால், கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான மின்சாரம் நேற்று (ஆகஸ்ட் 8) துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் இதுவரையில் 6 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தத் தவறியுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி நேற்றுகாலை மேயர் அலுவலகத்திற்கு சென்ற மின்சார சபை அதிகாரிகள் குழு மின்சாரத்தை துண்டித்தனர்.
அவர் பதவியில் இருந்தும் மேயர் இல்லத்தில் தங்கியிருந்தமையினால் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாநகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நேற்று (ஆகஸ்ட் 8) காலை தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபைக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
ஜூன் மாதம் தொடர்பான கட்டணப் பட்டியல் உரிய நேரத்தில் கிடைக்காததால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபை மின்னஞ்சல்கள் மூலம் கட்டண பட்டியல்களை அனுப்புவதாகவும், தவறான மின்னஞ்சல் முகவரியினால் உரிய நேரத்தில் பில் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக இலங்கை மின்சார சபையிடம் தனது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அதனை செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தெஹிவளை – கல்கிஸ்ஸ நகர சபைக்கான மின்சாரம் ஒரு மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டது