திருகோணமலை துறைமுக வீதி கனத்த சந்தியில் இன்று (26) அதிகாலை வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரும் மற்றுமொரு சிறுமியும் காயமடைந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
வேனை ஓட்டிச் சென்ற வேன் சாரதி ஆபத்தான நிலையில் இருந்த தனது தாயை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஆபத்தான நிலையில் இருந்த தாய் கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வேன்-மோட்டார் சைக்கிள் விபத்தில் திருகோணமலை, Dockyard வீதியை வசிப்பிடமாகக் கொண்ட புனித மரியாள் பெண்கள் கல்லூரியில் 05ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த Edwick Sheralyn Tacey (வயது 09) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
அதே முகவரியைச் சேர்ந்த லிண்டா லீனா (வயது 34) என்ற பெண்ணும், ஜூட் கவிசாலினி (வயது 08) என்ற சிறுமியும் காயமடைந்ததுடன், காயமடைந்த சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காயமடைந்த பெண் தனது இளைய சகோதரி மற்றும் இளைய சகோதரனின் இரண்டு மகள்களை மேலதிக வகுப்புகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் திருகோணமலை துறைமுக பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.ஜே.எஸ்.ரணவீர தலைமையில் நடைபெறவுள்ளது.