பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணமான வசந்த யாப்பா பண்டார மற்றும் நளீன் பண்டார ஆகிய எம்.பிகளை இன்றைய தினம் சபை அமர்வில் பங்குபற்றுவதிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, தலைமையில் கூடியது.
மனுக்கல் சமர்ப்பணத்தின் பின்னர் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன், கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.
இதற்கு அரசாங்கத்தின் தரப்பில் பதிலளிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார, கேள்வியொன்றை எழுப்பினார்.
குறித்த கேள்வி ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்வியுடன் தொடர்பு இல்லாததன் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக 10 நிமிடங்கள் சபையின் செயல்பாடுகளை பிரதி சபாநாயகர் ஒத்திவைத்தார். மீண்டும் சபாநாயகர் தலைமையில் சபை அமர்வுகள் ஆரம்பமாகின.
சபையின் செயல்பாடுகளுக்கு இடையூரை ஏற்படுத்திய நளீன் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகிய எம்.பிகள் இரண்டு நாட்கள் சபை அமர்வில் கலந்துகொள்வதற்கு தடைவிதிக்க வேண்டுமென ஆளுங்கட்சி கொரடாவான பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பில் பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,
பாராளுமன்றத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக பாரிய மக்கள் சக்தி எழுச்சியடைந்து வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகள் மற்றும் தவறான நடத்தைகள் காரணமாக நேரம் விரயமாவதுடன், மக்கள் பணமும் வீணடிக்கப்படுவதாக கருதுகின்றனர்.
பாராளுமன்றம் நாட்டின் அதியுயர் சபையாகும். கடந்த காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிகளவான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அந்த சந்தர்ப்பங்களை அவர்கள் தவறாக பயன்படுத்தினர்.
கத்துவது, கூச்சலிடுவது, அச்சுறுத்துவது நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படுத்தப்படும் அநாகரீகமான செயல்பாடாக கருதி நளீன் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகிய இரு எம்பிகளையும் இன்றைய சபை செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் பேசி தீர்மானிக்கப்படும் என்றார்.