மலேசியாவில் நடைபெற்ற 35 வது சர்வதேச ஓபன் மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா லெகுன் அமைப்பினரின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (24) புத்தளத்தில் விமரிசையாக நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் புத்தளத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். உயரம் பாய்தல் போட்டியில் ஆசிரியர் ஹுமாயூன் அவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார். அவரது சகோதரர் ஆசிரியர் எம்.எஃப்.எம். துபையில் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இந்தச் சாதனையாளர்களை கௌரவிக்கும் முகமாக புத்தளம் மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கம், ஸாஹிரா தேசியக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்கள், புத்தளம் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், வெட்டளை அஸன் குத்தூஸ் அரசினர் முஸ்லிம் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், Power 90 ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர்கள் அமைப்பு, Odidas உதைப்பந்தாட்ட கழகம், H. S. இஸ்மாயில் ஞாபகார்த்த மன்றம், பெரிஸ்டர் நைனா மரைக்கார் பவுண்டேஷன் பிரதிநிதிகளின் பங்கேற்பில் இவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் தனது பாடசாலைக்கும், தனது ஊருக்கும், தாய் நாட்டுக்கும் பெருமையையும், புகழையும் பெற்றுத் தந்த ஆசிரியர் ஹுமாயூன் மற்றும் ஆசிரியர் துபையில் அவர்களை NewsNow வாழ்த்துகிறது.