அரகலய போராட்டத்தின் போது சேதப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உடமைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை 1,414 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
31 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே 714 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஜூலை 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் அன்றைய ஆளும் கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், உடைமைகள் தீயிட்டு நாசமாக்கப்பட்டன.
இவ்வாறு சொத்துக்களை இழந்த உறுப்பினர்களுக்கு நட்ட ஈடு வழங்க உள்விவகார அமைச்சின் கீழ் உள்ள பாராளுமன்ற விவகாரப் பிரிவு நடவடிக்கை எடுத்தது.
இதன்படி 31 உறுப்பினர்களுக்கு 714 மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 700 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. இந்த மேலதிக ஏற்பாட்டை பெறுவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நட்டஈடு வழங்குவதற்கு மேலும் 200 மில்லியன் ரூபா தேவைப்படும் என்றும் பாராளுமன்ற விவகாரப் பிரிவு வலியுறுத்துகிறது.
இதேவேளை, போராட்டத்தின் போது சொத்துக்கள் அழிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக அல்லாத 73 உள்ளுர் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் பிரஜைகளுக்கு 519 மில்லியன் ரூபா நஷ்டஈடாக அரசாங்கம் வழங்கியுள்ளது.
அந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்குவது இழப்பீட்டு அலுவலகத்தால் செய்யப்படுகிறது.
அவர்களுக்கு வழங்க வேண்டிய மீதி இழப்பீடு எதிர்காலத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .