அறப்பணிகளில் தன் வாழ்நாளின் இறுதிப் பகுதியை கழித்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி

Date:

‘autobiography of totonji’ என்ற நூலில் இருந்து கலாநிதி அஹ்மத் தொதோன்ஜி அவர்கள்…

1981இல் முஹம்மது அலீ குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது வாழ்வை மனித நேயப் பணிகளுக்காக அர்ப்பணித்து, இஸ்லாம் மார்க்கத்தை நோக்கி மக்களை அழைக்கலானார்.

பின்னர் -கவலைக்குரிய வகையில்- அவர் ‘பார்கின்சன்’ நோயினால் பாதிக்கப்பட்டார்.

குத்துச்சண்டைகளின் போது தலையில் விழுந்த தாக்குதல்களால் ஏற்பட்ட அதிர்ச்சியே அதற்குக் காரணம்.

எனினும், அவர் நோயை எதிர்த்து ஆற்றலுடன் போராடினார். குத்துச் சண்டைக் களத்தில் போராடுவது போல், ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து அதனுடன் போராடிக் கொண்டே தனது பணியைத் தொடர்ந்தார்.

மக்களின் பார்வைக்குரியவராகவே எப்போதும் இருந்தார். அவரது நற்செயல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! வயதாக ஆக அவர் அதிகமதிகம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

ஏராளமான மனிதர்களுக்கு வெவ்வேறு வழிகளில் உதவி புரிந்தார்.
தனது நேரத்தையும் செல்வத்தையும் உழைப்பையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தார்.

அறப்பணிகளுக்கு உதவும் வகையில் ‘முஹம்மது அலீ நிறுவனம்’ Muhammad Ali Foundation என்ற தொண்டு நிறுவனத்தை முற்றிலும் தனது சொந்தப் பணத்தில் உருவாக்கினார்.

நடமாடும் நூலகமாகச் செயல்படும் பேருந்து ஒன்று அவரிடம் இருந்தது. பயணம் செய்ய முடியாதளவு நோய்வாய்ப்படும் வரை அவரும் அவரது குழுவும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்கும் நகரங்களுக்கும் பயணம் செய்து மக்களுடன் உரையாடினர்.

முஹம்மது அலீ வெர்ஜினியாவிலுள்ள எமது ‘இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் (IIIT) அறங்காவலர் சபையையும் சந்தித்தார்.

அமெரிக்காவில் முஸ்லிம்களது பணியை முன்னேற்றுதல் தொடர்பாகவும், அமெரிக்க முஸ்லிம்களாக வாழத் தகுந்த வகையில் அவர்களது ஆளுமைகளை விருத்தி செய்வது தொடர்பாகவும் நாங்கள் பேசினோம்.

முஹம்மது அலீ க்ளே, அல்-ஹாஜ் மாலிக் அல்-ஷபாஸ் (Malcom X) ஆகிய இருவருமே தனித்துவமானவர்களாக இருந்தனர்.

அரிதான பெறுமதியும் இயல்பும் கொண்டிருந்தனர்.

முஹம்மது அலீ அன்று மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரராக இருந்ததால் மாத்திரம் பிரபல்யம் அடைந்திருக்கவில்லை; அவரிடம் பலமான நெறிமுறைகள் காணப்பட்டன.
தனக்காக வரித்துக் கொண்ட கொள்கைகளை உயர்ந்த தரத்தில் பின்பற்றுவதிலும், இஸ்லாமிய நம்பிக்கைகளைப் பேணுவதிலும், புரட்சிகரமான வழிமுறைகளைக் கைக்கொள்வதிலும் அவர் அச்சம் கொள்ளாதவராக இருந்தார்.
தனது கருத்துகளை அனாயாசமாக வெளிப்படுத்தும் மொழியாற்றல் அவரிடம் இருந்தது.
உதாரணமாக, இராணுவத்தில் இணைந்து வியட்நாமில் போரிடுமாறு அவருக்கு அறிவிப்பு வந்த போது அதனை மறுத்தார்.
முன்னர் வேறெவரும் எடுத்திராத அத்தகைய நிலைப்பாட்டினால் அவர் பிரபல்யமும் அடைந்தார். ஏனெனில், வியட்னாம் போர் மனிதாபிமானமற்றது என்ற அபிப்பிராயம் அவரிடமிருந்தது.

தனது நிலைப்பாட்டை எவரது கண்டனத்துக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்தவும் செய்தார்.

விளையாட்டுத் துறையில் சாதித்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இராணுவ சேவையிலிருந்து விலக்களிக்குமாறு அவரால் விண்ணப்பித்திருக்க முடியும்.

ஆனால், தனது இஸ்லாமிய நம்பிக்கைகளை மதிக்கும் வகையிலேயே வியட்னாம் போருக்கான இராணுவ சேவையில் இணைந்து கொள்ள அவர் மறுத்தார்.

மனிதர்களை அநியாயமாகவும் அத்துமீறியும் கொல்வதை இஸ்லாத்தின் கொள்கைகள் தடுக்கின்றன என்பதையும், போர் என்பது -தனது கண்ணோட்டத்தில்- அத்தகைய வன்முறையொன்றை முழுச் சமுதாயமொன்றின் மீது கட்டவிழ்ப்பதுதான் என்பதையும் அந்த நிலைப்பாட்டின் மூலமாக உலகுக்குப் பிரகடனம் செய்தார்.

வியட்னாம் யுத்தம் தொடர்பாக முஹம்மது அலீ பகிரங்கமாக வெளிப்படுத்திய நிலைப்பாடு அமெரிக்காவின் அரசியல்வாதிகள் பலரை கோபமடையச் செய்தது.
ஆனாலும் அவர் தனது கொள்கையில் திடமாக நின்றார்.

பல இளைஞர்களும் அவரது முன்மாதிரியை பின்பற்றத் தொடங்கினர்.

இந்த மறுப்பினால் அதி பாரக் குத்துச் சண்டையில் அவர் பெற்றிருந்த சாம்பியன் பட்டம் மீளப் பெறப் பட்டதுடன், குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்காமலும் தடுக்கப்பட்டார்.

இராணுவ சேவைத் தவிர்ப்புக்காக பத்தாயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டார்.

மூன்றரை வருட தடைக்காலம் முடிவடைந்த பிறகு 1970ஆம் ஆண்டிலேயே முஹம்மது அலீ மீண்டும் குத்துச் சண்டைக் களத்தில் கால்பதிக்க முடிந்தது.

பின்னர் 1974இல் Rumble in the Jungle என்னும் குத்துச்சண்டைப் போட்டி வந்தது.
வரலாறு காணாத மிகப் பிரமாண்டமான அப் போட்டியில் உலக அதி பார குத்துச் சண்டைச் சாம்பியனான ஜார்ஜ் ஃபோர்மேனுடன் முஹம்மது அலீ மோத வேண்டியிருந்தது.

எவராலும் தோற்கடிக்கப் பட முடியாதிருந்த ஃபோர்மேனை முஹம்மது அலீ தோற்கடித்த அந்தப் போட்டிதான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு அவரைக் கொண்டு சென்றது.

Irfan Pmm அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து…

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...