உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மீண்டுமொரு விசாரணை அவசியம் இல்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று ஏற்கனவே முறையான விசாரணைகளை நடத்தியுள்ளன.
அதனால், மீண்டும் அதுதொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் இன்டர்போல், அவுஸ்ரேலியாவின் பெடரல் பொலிஸார், அமெரிக்காவின் எப்.பி.ஐ ஆகிய பொலிஸார் முறையான விசாரணைகளை நடத்தி அவை தொடர்பிலான தகவல்களை ஏற்கனவே, சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்கள் வழங்கிய விசாரணை அறிக்கைகளின் பிரகாரம் பெரும்பாலானவர்களுக்கு எதிராக வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணையொன்றை நடத்துமாறு அமெரிக்காவின் எப்.பி.ஐ பொலிஸ் திணைக்களத்துக்கு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்த போது, இந்த தாக்குதல்கள் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு ஏற்கனவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் மீண்டுமொரு விசாரணை அவசியமில்லையென அவர்கள் வலியுறுத்தியதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு செனல் 4 தொலைக்காட்சி உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் வெளியிட்டிருந்த ஆவணப்படத்தால் இலங்கையில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.