பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்னவின் கார் மீது நேற்று (17) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது நேற்று இரவு 10.40 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அனுராதபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தனது வேலைகளை முடித்துகொண்டு வீடு திரும்பும் வேளையில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அப்போது காரில் உத்திக பிரேமரத்ன மட்டுமே இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
காரின் இடதுபக்கம் பின் இருக்கையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, இதுதொடர்பிலான விசாரணைகள் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.