கடந்த 11/09/2023 முதல் 17/09/2023 வரை கிழக்கு மாகாண மக்களை மையப்படுத்தி காத்தான்குடி தள வைத்தியசாலையில் இந்த கண் சத்திர சிகிட்சை (கெட்டரிக்) நடந்துவருகின்றது. ஏற்கனவே ஒவ்வொரு ஊரிலும் முற்பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு நடைபெற்ற இச்சத்திர சிகிட்சைக்காக இன்றையதினம் காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ளவர்களுக்கான பதிவும், ஆரம்ப பரிசோதனையும் இடம் பெற்று வருகின்றது.
சவூதிஅரேபிய மன்னரின் புணர்வாழ்வு, மற்றும் மனிதநேயப் பணிகளுக்கான தொண்டு நிறுவனமான மர்கஸ் ஸல்மான் (கண்பார்வையின்மையை ஒழிக்கும் இலவச சத்திரசிட்சை அமைப்பினூடாக) இக்கண் சிகிட்சை முகாம் இடம்பெறுகின்றது.
உலகில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் நடாத்தப்படும் இவ் இலவச சத்திரசிகிட்சை முகாம் இலங்கையில் இதுவரை 21 தடவைகள் நடத்தப்பட்டதாகவும் 26,000 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் கண் சத்திரசிகிட்சைக்கு உட்படுத்தப்பட்டு கண்பார்வை மீளப்பெற்று வாழ்வதாகவும் இம்மருத்துவ முகாமின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கைக்கான சவூதியரேபிய தூதரகத்தின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட்டு வரும் இம்மருத்தவ முகாமினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கெளரவ சவூதியரேபிய தூதுவர் அஷ்ஷெய்க் காலித் பின் அல் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பாகிஸ்தான் நாட்டின் வைத்தியர்களால் மேற்கொள்ளப்படும் இச்சத்திரசிகிட்சை முகாமின் மருத்துவக் குழுத்தலைவர் சவூதியைச் சேர்ந்த றாஇத் ஸாலிம் அவர்கள் இம்முகாம் இலங்கை மக்களுக்காக முற்றிலும் இலவசமாக சாதிமத வேறுபாடின்றி நடத்தப்படுவதாகவும் இலங்கை மக்களை தான் பெரிதும் நேசிப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.