காலிஸ்தான் பயங்கரவாதி கொலையான விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை கனடா அரசு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. ” என்று கூறினார். இதனை இந்தியா அபத்தமானது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்துள்ளது.
பிரதமரின் பேச்சைத் தொடர்ந்து, பேசிய வெளிவிவகார அமைச்சர், “இன்று நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்” என்றார்.
1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
காலிஸ்தான் விடுதலைக்காக போராடிய இவர் இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி,
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான KTF எனப்படும் காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பதில் நிஜ்ஜார் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்தியாவில் இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக, நிஜ்ஜாரின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து இந்தியா தனது கவலைகளை பலமுறை கனடாவிடம் தெரிவித்தது.
2018 ஆம் ஆண்டில், முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ஜஸ்டின் ட்ரூடோவிடம் தேடப்படும் நபர்களின் பட்டியல் அளித்தார்.
அதில் நிஜ்ஜாரின் பெயரும் இருந்தது. ஆனால் தொடர்ந்து கனடா அரசு நிஜ்ஜாருக்கு ஆதரவாக இருந்தது.
பின்னர் 2022 ஆம் ஆண்டில், பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதத்தை பரப்புவது தொடர்பான வழக்குகளில் தேடப்பட்ட நிஜ்ஜாரை நாடு கடத்துமாறு பஞ்சாப் காவல்துறை கோரியது. ஆனால் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு பஞ்சாபின் லூதியானா நகரில் 6 பேர் கொல்லப்பட்ட மற்றும் 42 பேர் காயமடைந்த குண்டுவெடிப்பு உட்பட பல வழக்குகளில் நிஜ்ஜார் தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில்தான் இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், கடந்த ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என கனடா தெரிவித்துள்ளது