பலஸ்தீனின் பிரச்சினைக்கு இரு நாட்டுத் தீர்வுக்கான ஆதரவைப் பெறும் வகையில் சவூதி அரேபியாவின் வெளிநாட்டமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் அல் ஸஊத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 30 நாடுகள் கலந்து கொண்டன.
பெரும்பாலும் வெளிநாட்டமைச்சர்கள் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பு திங்களன்று (18) நியுயோர்க்கில் மூடிய அறையில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் இஸ்ரேல் – பலஸ்தீன் பிரச்சினைக்கு சுதந்திர பலஸ்தீன தேசத்தை உருவாக்குவதே ஒரே தீர்வு என சவூதியின் வெளிநாட்டமைச்சர் தெரிவித்த கருத்தை சவூதியின் அரச தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.
இருநாட்டுத் தீர்வில் மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர் எனத் தெரிவித்த அவர் ஆகவே நாங்கள் ஆரம்ப நிலைக்கு மீண்டு சுதந்திர பலஸ்தீனை உருவாக்க வேண்டும் என்றார்.
இந்தச் சந்திப்பினை சவூதிஅரேபியா, ஜோர்தான், எகிப்து, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் என்பவற்றுடன் ஐரோப்பிய யூனியனும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததாகவும் இஸ்ரேல்-பலஸ்தீன் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை எனவும் இஸ்ரேலின் ஹரட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சவூதிக்கும் இஸ்ரேலுக்குமிடையில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் பலஸ்தீன் தொடர்பிலான சவூதியின் நிலைப்பாடு முக்கியம் பெறுகிறது.