நிதி நெருக்கடி காணப்படும் நாடுகளுக்கு உதவ முறையான திட்டம் அவசியம்: ஜனாதிபதி சிறப்புரை!

Date:

நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று (20) நடைபெற்ற அபிவிருத்திக்கான நிதியுதவி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் ஆற்றிய சிறப்புரையிலேயே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.

“யாரையும் கைவிடாத உலகில் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான நிதியளிப்பு” எனும் தொனிப்பொருளில், நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்த 2023 மாநாட்டுடன் இணைந்தாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் பல நாடுகளின் அரச தலைவர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“ஒரு பொதுவான கட்டமைப்பு அல்லது செயன்முறை இல்லாததன் விளைவாக நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் அவலநிலை குறித்து சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உதாரணமாக கூறுவதாயின், இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த பின்பு அனைத்து வெளிநாட்டு நிதி கொடுக்கல் வாங்கல்களும் நிறுத்தப்பட்டதைக் குறிப்பிடலாம்.

இதன் காரணமாக பாரிய அரசியல் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தாலும், அமெரிக்க அரசிடமிருந்து கிடைத்த பசளை நன்கொடையால் பல பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறாகப் பார்க்கும்போது, நிதிச் நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்க முறையான திட்டம் தேவை என்பதை வலியுறுத்தும் அதேநேரம், இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும் என்பதோடு, உலகளாவிய பொருளாதார நிலைமை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த ஆண்டு, எதிர்பார்க்கப்படும் உலகளாவிய மொத்த தேசிய உற்பத்தி 105 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இதில் 91 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் பொதுக் கடனாகும். எனவே, இந்த அனுமானங்களை மையப்படுத்தியே நாம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதனால் தற்போது எம்மிடத்தில் உள்ள விடயங்களை கொண்டு பயனடைய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அதன்படி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீடிக்கப்பட்ட கடனாக பெற்றுக்கொள்ளும் இயலுமை உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பயன்டுத்துவதே இங்கு முக்கியமானதாக காணப்படுகின்றது.

அதனையடுத்து, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வருடாந்தம் 500 பில்லியன் டொலர்களையும் வழங்குவதாகவும், குறுகிய காலக் கடன்களை குறைந்த வட்டி விகிதத்தில் நீண்ட காலக் கடனாக மாற்றப்பட வேண்டும் எனவும் செயலாளர் நாயகத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்துவதற்கான அவசர வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இலக்குகள் எதிர்காலத்தில் அடைந்துகொள்ள வேண்டியிருப்பதால், செயலாளர் நாயகம் முன்வைத்த யோசனைகளை சாத்தியமாக்குவது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். அதேசமயம், மேலும் இரண்டு முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக உரம் மற்றும் எரிபொருளுக்கான மானியங்களை விரிவுபடுத்துவது தொடர்பான உலக வங்கியின் முன்மொழிவு மிக முக்கியமான யோசனை யாகும். இதன்போது சேமிக்கப்படும் பணத்தை வேறு தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் இயலுமையும் கிட்டும்.

அடுத்த முக்கியமான யோசனையாக, வர்த்தக நிதி தொடர்பான உலக வணிக அமைப்பின் (WTO) முன்மொழிவை கருத முடியும். அதனால் ஏற்றுமதி விரிவுபடுத்தப்படும்.

கடன் வழங்குநர்களுக்கு நெருக்கடிகள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன். ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அந்தச் சலுகைகளை உடனடியாக வழங்காவிட்டால், இந்த முன்மொழிவுகள் பயனற்றதாகிவிடும். எங்களுக்கு பேச்சுமூலமான ஆதரவு கிடைத்துள்ளது. அந்த வார்த்தைகள் எப்போது செயல்படுத்தப்படும் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

தற்போதைய சவால்கள் மற்றும் அதற்கான பயனுள்ள தீர்வுகளை பற்றி பேசுவதற்கும் நிலையான அபிவிருத்திக்காக 2030 ஒழுங்கு பத்திரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கும் உறுப்பு நாடுகளுக்கும் ஏனைய பங்குதாரர்களுக்கும் இவ்வாறான உயர்மட்ட கலந்துரையாடல்கள் சிறந்த களமாக அமையும்.” என்றும் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...