இலங்கையில் பணம் பெற்று விருதுகள் வழங்கும் நிகழ்வுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புத்த சாசன, மத விவகார மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, இதற்கான தீர்மானம் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், பணம் பெற்று விருது வழங்கும் நிகழ்வுகளை தடை செய்வது தொடர்பில் இன்றைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தான், ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் திறமை வாய்ந்தவர்களுக்கு தமது அமைச்சினால் விருதுகள் வழங்கப்படுவதாகவும், அதனையே சிலர் தற்போது வர்த்தகமாக மாற்றியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு பணத்தை பெற்று விருதுகள் வழங்கப்படுகின்றமையினால், தமது அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தினால் வழங்கப்படும் விருதுகளுக்கான கௌரவம் இல்லாமல் போவதாக கூறிய அமைச்சர், இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தானும் இருப்பதாக குறிப்பிட்டார்.
இதன்படி, அமைச்சரவை ஏற்கனவே தீர்மானத்தை எடுத்துள்ள இந்த விவகாரம் குறித்து, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பதாகவும் புத்த சாசன, மத விவகார மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.