அண்மைக்காலமாக நமது நாட்டில் உள்ள பல பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அப்பாலும் சமூக விவகாரங்களையும், மக்கள் பிரச்சினைகளையும் தீர்க்கின்ற வகையிலான பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை ஓர் ஆரோக்கியமான நிகழ்வாகும்.
இந்த வகையில் கொழும்பு 07 அமைந்திருக்கின்ற முக்கியமான ஜும்ஆ பள்ளிவாயலாக இருக்கின்ற ஜாவத்தை பள்ளிவாசல் பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அங்கு இருக்கின்ற திறமையான நிர்வாகிகளின் சிறப்பான நிர்வாகத்தின் காரணமாகவும், ஜமாஅத்தினரின் பங்களிப்பு காரணமாகவும் அங்கு நடைபெற்று வருகின்ற சில முக்கியமான சமூகப்பணிகளே இங்கு நாங்கள் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
அந்த வகையில் ஜாவத்தை பிரதேசத்திலும் பொதுவாக கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் வாழுகின்ற ஏழைகளது அடிப்படையான உணவு, மருந்து, உடை போன்ற தேவைகளை கருத்தில் கொண்டு இலவசமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1. உலர் உணவு விநியோகம்
உலர் உணவுப் பொருட்களைக் கொண்ட இரண்டு அலுமாரிகள் பள்ளிவாயலுக்குள் வைக்கப்பட்டுள்ளன. அரிசி, பருப்பு, சீனி, கடலை, இடியாப்ப மாவு, தேங்காய், பால்மாவு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இங்கு இருக்கின்றன. தேவையானவர்கள் காரியாலயத்தில் உள்ள இதற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொண்டு தமது பெயர்களை பதிவு செய்த பின்னர் உணவுப் பண்டங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒருவருக்கு ஒரு வாரத்திற்கு ஒரு தடவை மாத்திரமே இந்த உதவி வழங்கப்படும்.
2. மருத்துவ உதவி
அதேபோல இப்பிரதேசத்தில் உள்ள வறிய முதியவர் (Senior Citizens) களுக்குத் தேவையான மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கான மற்றோர் ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த நோயாளிகள் தமது வைத்தியரால் தமக்கு வழங்கப்பட்ட மருந்துச் சீட்டை (Prescription) காரியாலயத்தில் ஒப்படைத்து அந்த மருந்துகளை பாமஸியில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக பள்ளிவாயலில் உள்ள உத்தியோகத்தர்களால் நோயாளிகளை டவுன்ஹோலில் அமைந்துள்ள ஒசுசல பாமஸிக்கு அழைத்துச் சென்று மருந்துகளை கொள்வனவு செய்து கொடுக்கப்படுகின்றது.
3. ஆடை விநியோகம்
ஆடைத் தேவையுடையவர்கள் குறித்த சில ஆடைகளை காரியாலயத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டி இருக்கிறது.
4. மூக்குக் கண்ணாடி வழங்கல்
காரியாலயத்தில் ஏற்கனவே சில மூக்கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன. கண்பார்வையில் குறைபாடு இருப்பவர்கள் கண் வைத்தியரிடமிருந்து பெற்றுக் கொண்ட(Prescription) ஐ காரியாலயத்தில் காண்பித்து தமக்குப் பொருத்தமான கண்ணாடிகள் அங்கு இருப்பின் அவற்றை எடுத்துச் செல்லலாம். ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும் ஏழைகளுக்கு கைகளில் பணம் ஒப்படைக்கப்படுவதில்லை என்று பள்ளி நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது.
இந்தப் பணிக்காக ஒவ்வொரு ஜும்ஆவிற்குப் பின்னரும் பிரத்தியேகமான வசூல் ஒன்றையும் நிருவாகம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாம் என்பது வெறுமனே நம்பிக்கை கோட்பாடுகளையும் வணக்க வழிபாடுகளையும் மாத்திரம் கொண்டதல்ல. சமூகத்தில் இருக்கும் வறுமைப்பட்டவர்களை அரவணைத்து அவர்களது ஈமானை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளையும் இஸ்லாம் செய்திருக்கிறது.
இப்பணியை முன்மாதிரியாக கொண்டு இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள பள்ளிவாயல்கள் செயல்பட வேண்டும். சில பள்ளிவாசல்களில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜாவத்தை பள்ளியில் இதற்கான ஏற்பாட்டை செய்திருக்கும் அனைவருக்கும் நாம் அனைவரும் துஆ செய்ய வேண்டும். இந்த உயர்ந்த கைங்கரியத்திற்காக ஆலோசனை வழங்கியவர்கள், அமுல் நடத்தும் நிர்வாக சபையினர், பள்ளிவாயல் உத்தியோகஸ்தர்கள், இதற்காக பண, பொருள் உதவி வழங்குபவர்கள் அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா ‘ஸதகத்துல் ஜாரியா’ என்ற வகையில் உயர்ந்த கூலியை வழங்குவானாக.
இவ்வுதவியை பெற்று செல்லும் ஏழைகள் அடையும் நிம்மதியும், சந்தோஷமும் நிச்சயமாக இந்த கைங்கரியத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்களுடைய நன்மைத் தராசை பாரமாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.